சேலத்தில் பேசிய அமைச்சர் கே.என்.நேரு தகுதியுள்ள திமுகவினருக்கு அரசு வேலை கிடைக்க நான் பொறுப்பு என்றார்.
சேலம் மாவட்டத்தில் வரும் 11 ஆம் தேதி அன்று ஒரு லட்சம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இவ்விழாவில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்கி பின்னர் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை திறந்து வைக்கவுள்ளார். இந்த நிலையில் இதற்கான பிரமாண்ட மேடை பணி நடந்து வருவதால் அமைச்சர் கே.என்.நேரு இன்று அங்கு சென்று பார்வையிட்டார். இதற்கிடையே சேலம் நிகழ்ச்சியில் அவர் பேசியதான வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியள்ளது.
தொண்டர்கள் முன்னிலையில் பேசிய கே.என்.நேரு, ‘திமுகவினர் யார் யாருக்கு தகுதி இருக்கிறதோ அவர்களுக்கு நிச்சயம் அரசு பணி கிடைக்க நான் உறுதியாக இருப்பேன்’ என்று அமைச்சர் கே.என். நேரு பேசியுள்ளார். இது பயங்கர சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த ஆட்சியில் ஒப்பந்த ஊழியர்களாக இருந்தவர்களை மாற்றி திமுகவை சேர்ந்தவர்கள் பணியில் அமர்த்தப்படுவதாக புகார் எழுந்தது. இவ்வாறு ஒப்பந்த தொழிலாளர்கள் விஷயத்தில் திமுகவினர் மீது குற்றசாட்டு உள்ளபோது லட்சக்கணக்கான இளைஞர்களின் கனவாக இருக்கும் அரசு பணியை திமுகவினருக்கு வழங்க உறுதியாக இருப்பேன் என்று அமைச்சர் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக மேடை அமைக்கும் பணிகளை பார்வையிட்ட அமைச்சர் நேரு பத்திரிகையாளர் சந்தித்தார். அப்போது அவரிடம், சட்டம் ஒழுங்கு சரியில்லை என அதிமுக போராட்டம் நடத்தியதை குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தன் முதுகை திரும்பி பார்க்க வேண்டும். அப்போதுதான், அவருடைய ஆட்சியில் தான் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்பது தெரியவரும் என கூறினார்.