செக் குடியரசில், உலகின் மிகப்பெரிய தொங்கு நடைபாலம், மக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய நாடான செக் குடியரசின் டோல்னி மோரோவா கிராமத்தில், ‘ரிசார்ட்’ எனப்படும், ஒரு சொகுசு விடுதி அமைந்துள்ளது. இங்கு, சுற்றுலா பயணியரை ஈர்க்கும் விதமாக, ஸ்லாம்னிக் மலையையும், கிலம் மலையையும் இணைக்கும் வகையில், பிரமாண்டமான தொங்கு நடைப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. ‘ஸ்கை பிரிட்ஜ் – 721’ என, பெயரிடப்பட்டுள்ள இந்த நடைபாலம், 65 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ளது.
312 அடி உயரத்தில், 2,365 அடி நீளம் மற்றும், 4 அடி அகலத்தில் கட்டமைக்கப்பட்டுள்ள இந்த பாலம், உலகின் மிகப்பெரிய தொங்கு நடைபாலமாகும். இதற்கு முன், நேபாளத்தில், 1,860 அடி நீளமுடைய பாங்லங் பார்பத் தொங்கு நடைபாலம், உலகின் மிகப்பெரிய தொங்கு நடைபாலமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இரண்டு ஆண்டுகளாக கட்டப்பட்டு வந்த ஸ்கை பிரிட்ஜ் – 721 நடைபாலம், நேற்று முன்தினம், மக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது.