அமமுக செயற்குழு கூட்டம் ஜூன் 20ஆம் தேதி நடைபெறும்: டிடிவி தினகரன்

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் செயற்குழு கூட்டம், ஜூன் 7ஆம் தேதிக்கு பதிலாக ஜூன் 20ஆம் தேதி தலைமை கழகத்தில் நடைபெறும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.

அமமுக செயற்குழு கூட்டம் வரும் ஜூன் 7 ஆம் தேதி சென்னை தலைமை கழகத்தில் நடைபெறுவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் செயற்குழு நடைபெறும் தேதி மாற்றப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

ஜூன் 7ஆம் தேதி நடைபெறவிருந்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் செயற்குழு கூட்டம் வரும் ஜூன் 20 அன்று காலை 09.00 மணிக்கு சென்னை, ராயப்பேட்டையிலுள்ள தலைமைக் கழக அலுவலகத்தில் நடைபெற உள்ளது. அனைத்து கழக செயற்குழு உறுப்பினர்கள் தங்களுக்கான அழைப்பிதழோடு தவறாமல் வந்து கலந்து கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

அதிமுகவில் ஈபிஎஸ் உடனான அதிகாரப் போட்டியில் பின்னடைவைச் சந்தித்து வரும் ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரனை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். அப்போது இருவரும் சேர்ந்து அதிமுகவை மீட்டெடுப்பதாக கூறினர். தொண்டர்களை ஒன்றிணைக்க மாநாடு நடத்தவும் திட்டமிட்டுள்ளனர். இந்தச் சூழலில் அமமுக செயற்குழு கூட்டம் கூடுவது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இந்தச் செயற்குழு கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு அளிப்பது, அவர் பங்கேற்கும் மாநாட்டில் தினகரன் கலந்துகொள்வது தொடர்பாக ஆலோசிக்கப்பட இருப்பதாக தெரிகிறது. அதேபோல் அமமுகவில் இருந்து அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர் திமுக, அதிமுக என மாற்றுக் கட்சிகளுக்கு படையெடுத்து வருவதால், கட்சி மாறும் படலத்தை தடுத்த நிறுத்துவது பற்றியும் செயற்குழுவில் டிடிவி தினகரன் விவாதிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.