கரூரில் ஐடி ரெய்டு ஏழாவது நாளாக தொடர்கிறது. அமைச்சர் செந்தில் பாலாஜியின் நண்பரும், அரசு ஒப்பந்ததாரருமான சங்கர் ஆனந்த் பண்ணை வீட்டில் வருமான வரித்துறையினர் அதிரடியாக இன்று சோதனை நடத்தி வருகின்றனர்.
கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார், அவரது ஆதரவாளர்கள், உறவினர்கள், நண்பர்கள், ஒப்பந்ததாரர் ஆகியோரின் வீடுகள், அலுவலகங்கள், கல் குவாரிகள் உட்பட பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த மே 26ஆம் தேதி முதல் சோதனை நடத்தி வருகின்றனர். கரூர் காந்தி நகரில் உள்ள அரசு ஒப்பந்ததாரர் எம்.சி.எஸ்.சங்கர் ஆனந்த் வீடு ஆகிய இடங்களில் வருமான வரித்துறையின் சோதனை நடைபெற்றது. கரூர் செங்குந்தபுரம் 80 அடி சாலையில் உள்ள எம்.சி.எஸ்.சங்கர் ஆனந்த்தின் அலுவலகத்தில் சோதனையிட 5 வாகனங்களில் 25-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சென்றனர். ரெய்டு குறித்து தகவல் அளித்துவிட்டு காத்திருந்தனர். ஆனாலும், யாரும் கதவை திறக்காததால் போலீசார் மற்றும் வருவாய் ஆய்வாளர் முன்னிலையில் ஐ.டி அதிகாரிகள், அலுவலக பூட்டை உடைத்து சோதனையில் ஈடுபட்டனர். மேலும், அரசு ஒப்பந்ததாரர் எம்.சி.சங்கர் ஆனந்த்தின் அலுவலக ஊழியரான ஷோபனா வீட்டில் தொடர்ந்து வருமான வரித்துறை அலுவலர்கள் சோதனை நடத்தினர். மேலும், ஷோபனாவை காரில் அழைத்துச் சென்று வருமான வரித் துறை அலுவலர்கள் விசாரணை நடத்தினர். சங்கர் ஆனந்த் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றும் விசாரணை நடத்தினர்.
அரசு ஒப்பந்ததாரர் சங்கர் ஆனந்த், கரூர், கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில், ‘சங்கர் ஆனந்த் இன்ஃபரா’ என்ற பெயரில், அரசு ஒப்பந்த பணிகளை செய்கிறார். இவர், செந்தில் பாலாஜிக்கும், அவரது தம்பி அசோக்குமாருக்கும் நெருக்கமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், சங்கர் ஆனந்தின் பண்ணை வீட்டில் தற்போது வருமான வரித்துறையினரின் சோதனை நடைபெற்று வருகிறது. மாயனூர் அடுத்த எழுதியாம்பட்டி பகுதியில் உள்ள சங்கர் ஆனந்த்தின் பண்ணை வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். ஐ.டி ரெய்டு காரணமாக, துப்பாக்கி ஏந்திய மத்திய துணை ராணுவப் படை வீரர்கள் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சங்கர் ஆனந்த் தொடர்புடைய இடங்களில் அடுத்தடுத்து வருமான வரித்துறையினரின் ரெய்டு தீவிரமடைந்துள்ளது கரூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.