பாலியல் புகாரில் பாதிக்கப்பட்ட மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவு தெரிவித்து இருக்கும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, புல்லட்டில் சென்று 2வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டார்.
இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும் பாஜக எம்பியுமான பிரஜ் பூஷண் சரண் சிங் மீதான பாலியல் புகாரில் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மல்யுத்த வீரர்கள், வீராங்கனைகள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு மம்தா பானர்ஜி ஆதரவு அளித்து வருகிறார்.
அந்த வகையில், கொல்கத்தாவில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் 2வது நாளாக நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற மம்தா பானர்ஜி மெழுகுவர்த்தி ஏந்தி காந்தி சிலையை நோக்கி பேரணியாகச் சென்றார். சிறிது தூரம் வரை நடந்து சென்ற மம்தா பிறகு தொண்டர் ஒருவரின் புல்லட்டில் தலைக்கவசம் அணிந்து சாலை பேரணியில் ஈடுபட்டார்.
பின்னர் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய மம்தா பானர்ஜி, மல்யுத்த வீரர், வீராங்கனைகள் நமது நாட்டின் பெருமைக்குரியவர்கள் என்று கூறினார். மல்யுத்த வீரர்களுக்கு நியாயம் கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என்றும் அவர் தெரிவித்தார். ஜனநாயக ரீதியான போராட்டங்களை முன்னெடுக்குமாறு மல்யுத்த வீரர்களிடம் கேட்டுக் கொண்ட மம்தா, இந்த போராட்டம் சுதந்திரத்திற்காகவும் மனிதாபிமான நீதிக்காகவும் என்றார்.