சென்னை-இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடக்கம்!

சென்னை-இலங்கை இடையே பயணிகள் கப்பலை மத்திய மந்திரி சர்பானந்தா சோனோவால் நேற்று கொடியசைத்து தொடங்கிவைத்தார்.

மத்திய அரசின் ‘சாகர்மாலா’ திட்டத்தின் கீழ், நீர்வழி போக்குவரத்தை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் மாநிலங்களுக்கும், அண்டை நாடுகளுக்கும் இடையே பயணிகள் கப்பல்கள் இயக்க தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. அந்தவகையில் சென்னை துறைமுகத்தில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் இயக்க தனியார் நிறுவனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது. எம்.வி. எம்பிரஸ் என்ற பெயரில் இயக்கப்பட உள்ள இந்த புதிய பயணிகள் கப்பலை மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழி போக்குவரத்து துறை மந்திரி சர்பானந்தா சோனோவால் சென்னை துறைமுகத்தில் இருந்து நேற்று கொடியசைத்து தொடங்கிவைத்தார்.

இந்த கப்பல் இலங்கையில் உள்ள ஹம்பன்தோட்டா, திரிகோணமலை, காங்கேசன் துறை ஆகிய 3 துறைமுகங்களை இணைக்கும் வகையில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த கப்பல் 2 முதல் 5 இரவுகளுடன் கூடிய பயணத்தை கொண்ட பேக்கேஜுகளுடன் சுற்றுலா கப்பலாகவும் இயக்கப்படுகிறது. சென்னை-இலங்கை இடையே பயணிகள் கப்பலை தொடங்கி வைத்த பின்பு மத்திய மந்திரி சர்பானாந்தா சோனோவால் சென்னையில் நடந்த வர்த்தக மேம்பாட்டு திட்டம் குறித்த கருத்தரங்கில் பங்கேற்று பேசினார். அப்போது அவர், ‘துறைமுகங்களில் சரக்குகளை கையாள்வதற்கான செலவை குறைக்க வேண்டும். நாட்டின் ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகத்தில் இந்தியா முன்னோடியாக இருப்பதற்கு வர்த்தக அமைப்புகள் பெரும் பங்காற்றி வருகின்றன’ என்றார்.

இதன்பின்பு, 2022-23-ம் கல்வியாண்டில் சென்னை துறைமுகசபை பள்ளியில் படித்து அதிக மதிப்பெண் பெற்ற எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 மாணவர்களுக்கு மத்திய மந்திரி விருது வழங்கி பாராட்டினார். இந்த நிகழ்ச்சியில் சென்னை துறைமுகசபை தலைவர் சுனில்பாலிவால், துணைத்தலைவர் விஸ்வநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.