வெளிநாடு செல்வதால் முதலீடுகள் வராது, புதிய கல்வி கொள்கை அவசியம் என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்த கருத்துகளுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டு பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்கள் கூட்டத்தை தன்னிச்சையாக ஊட்டியில் கூட்டினார் ஆளுநர் ஆர்.என்.ரவி. இந்த கூட்டத்துக்கு தமிழ்நாடு அரசு ஏற்கனவே கண்டனமும் தெரிவித்திருந்தது. ஊட்டியில் நடைபெற்ற பல்கலைக் கழக துணைவேந்தர்கள் கூட்டத்தில் பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துகளை ஆளுநர் ரவி முன்வைத்தார். ஆளுநர் ரவி பேசுகையில், வெளிநாடுகளுக்கு சென்று திரும்புவதால் முதலீடுகள் வந்துவிடாது என சாடினார். அண்மையில்தான் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், ஜப்பான் மற்றும் சிங்கப்பூர் நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு நாடு திரும்பினார். இந்த நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினை மறைமுகமாக விமர்சனம் செய்தது பெரும் சர்ச்சையாகி உள்ளது. மேலும் மத்திய பாஜக அரசின் புதிய கல்விக் கொள்கையையும் ஆளுநர் ரவி நியாயப்படுத்தி இந்த கூட்டத்தில் பேசினார்.
ஆளுநர் ரவியின் இத்தகைய கருத்துகளுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். மதிமுக பொதுச்செயலாளர் இன்று வெளியிட்ட அறிக்கையில், ஆளுநர் ஆர்.என்.ரவி தமது வரம்புகளை மீறி செயல்படுகிறார்; அவர் தமது போக்கைக் கைவிட வேன்டும் என கண்டனம் தெரிவித்துள்ளார்.