நெல்லுக்கான கொள்முதல் விலையை குவிண்டாலுக்கு ரூ.3000 ஆக நிர்ணயிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
இந்தியாவில் 2023-24ஆம் ஆண்டிற்கான நெல் கொள்முதல் விலையை குவிண்டாலுக்கு ரூ.2,183 ஆக உயர்த்தி மத்திய அரசு அறிவித்திருக்கிறது. நெல் கொள்முதல் விலையை கட்டுபடியாகும் அளவுக்கு உயர்த்த வேண்டும் என்று உழவர்கள் தொடர்ந்து போராடி வரும் நிலையில், மிகக்குறைந்த அளவில் மட்டுமே கொள்முதல் விலை உயர்த்தப்பட்டிருப்பது உழவர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.
டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், நடப்பாண்டில் நெல் கொள்முதல் விலையை குவிண்டாலுக்கு ரூ.143 உயர்த்த முடிவு செய்யப்பட்டிருக்கிறது. அதன்படி சாதாரண வகை நெல்லுக்கான கொள்முதல் விலை குவிண்டாலுக்கு ரூ.2183 ஆகவும், சன்ன வகை நெல்லுக்கான கொள்முதல் விலை ரூ.2203 ஆகவும் உயர்ந்துள்ளன. நெல்லுக்கான கொள்முதல் விலை கடந்த ஆண்டு குவிண்டாலுக்கு ரூ.100 மட்டுமே உயர்த்தப்பட்ட நிலையில், நடப்பாண்டில் ரூ.143 உயர்த்தப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது தான் என்றாலும், இந்த விலை உயர்வு உழவர்களின் குறைந்தபட்ச எதிர்பார்ப்பைக் கூட நிறைவேற்றவில்லை.
ஒரு குவிண்டால் நெல்லுக்கான கொள்முதல் விலை ரூ.3000 ஆக உயர்த்தப்பட வேண்டும் என்பது தான் உழவர்களின் பல ஆண்டு கோரிக்கை ஆகும். நடப்பாண்டிலாவது இந்த கோரிக்கை நிறைவேறும் என அவர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், அது நிறைவேறாதது தான் உழவர்களுக்கு ஏமாற்றத்தை அளித்திருக்கிறது. நெல் உற்பத்தி செய்வதற்கான விதைகள், உரம். ஆள்கூலி உள்ளிட்ட அனைத்து செலவுகளும் அதிகரித்திருக்கும் நிலையில், அதற்கேற்ற வகையில் கொள்முதல் விலை ரூ.3000 ஆக உயர்த்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை மிகவும் நியாயமானது ஆகும். அதில் எந்தத் தவறும் இல்லை.
ஆனால், உழவர்களின் எதிர்பார்ப்புகளையும், அவர்களின் கோரிக்கைகளில் உள்ள நியாயங்களையும் மத்திய அரசு உணர்ந்து கொள்ளவில்லை; புரிந்து கொள்ளவில்லை என்பது தான் நியாயமான அளவில் கொள்முதல் விலை உயர்த்தப்படாததற்கு காரணம் ஆகும். நெல்லுக்கான உற்பத்திச் செலவுடன் 50% லாபம் சேர்த்து கொள்முதல் விலை நிர்ணயிக்க வேண்டும் என்ற எம்.எஸ். சுவாமிநாதன் குழுவின் பரிந்துரையை செயல்படுத்த வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறது. மத்திய அரசும் இந்த யோசனையை செயல்படுத்தி விட்டதாக கூறி வருகிறது. ஆனால், நெல்லுக்கான உற்பத்தி செலவுகளை கணக்கிடுவதில் மத்திய அரசு பல குழப்பங்களைச் செய்கிறது. எடுத்துக்காட்டாக மத்திய அரசு கணக்கின்படி ஒரு குவிண்டால் நெல்லை உற்பத்தி செய்ய ரூ.1455 செலவு ஆவதாகவும், அதில் 50 விழுக்காடான ரூ.728 சேர்த்து கொள்முதல் விலையாக ரூ.2183 நிர்ணயிக்கப்பட்டிருப்பதாகவும் மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. மத்திய அரசு கணக்கிட்டுள்ள விலை மிகவும் குறைவு ஆகும். தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் செய்துள்ள மதிப்பீட்டின்படி 2020-21ஆம் ஆண்டு நிலவரப்படி, ஒரு குவிண்டால் நெல் உற்பத்தி செய்ய ரூ.1874 செலவாகிறது. அத்துடன் 50% லாபம் சேர்த்தால் கொள்முதல் விலையாக ரூ.2861 நிர்ணயிக்கப்பட வேண்டும். அதனுடன் தமிழக அரசு வழங்கும் ரூ.100 ஊக்கத்தொகையையும் சேர்த்தால் குவிண்டாலுக்கு ரூ.2961 கிடைக்கும். இது ரூ.3000க்கு வெறும் ரூ.39 தான் குறைவு என்பதால், உழவர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும்.
மத்திய அரசால் நிர்ணயிக்கப்பட்டுள்ள கொள்முதல் விலை மட்டும் வழங்கப்பட்டால், உழவர்களுக்கு குவிண்டாலுக்கு சராசரியாக ரூ.300 மட்டுமே லாபமாக கிடைக்கும். அதிலும் கூட நெல்லை கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு செல்லுதல், கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகளை கையாளுவோருக்கு கையூட்டு வழங்குதல் ஆகிய செலவுகளுக்குப் பிறகு பார்த்தால் உழவர்களுக்கு எந்த லாபமும் மிஞ்சாது. நெல் சாகுபடிக்காக ஏறக்குறைய 5 மாதங்களுக்கு அரும்பாடுபட்டு உழைக்கும் உழவர்களுக்கு குவிண்டாலுக்கு ரூ.1000 ஆவது லாபமாக கிடைக்க வேண்டும்; அதை அரசுகள் உறுதி செய்ய வேண்டும். எனவே, நெல்லுக்கான கொள்முதல் விலையை மத்திய அரசு மறு ஆய்வு செய்ய வேண்டும். நெல் உற்பத்திக்காக செய்யப்படும் அனைத்து செலவுகளையும் கருத்தில் கொண்டு நெல்லுக்கான கொள்முதல் விலையை குவிண்டாலுக்கு ரூ.3000 ஆக நிர்ணயிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.