ரூ2,000 நோட்டு மாற்றம்: அவரச வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு!

ஆவணங்கள் இல்லாமல் வங்கிகளில் ரூ2,000 நோட்டு மாற்ற அனுமதிப்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் அவசரமாக விசாரிக்க மறுத்துவிட்டது.

ரூ. 2,000 நோட்டுகளை வாபஸ் பெறுவதாக ரிசர்வ் வங்கி அண்மையில் அறிவித்தது. இந்த நோட்டுகளை மாற்றுவதற்கு எந்த ஒரு ஆவணமும் தேவை இல்லை என்பதும் ரிசர்வ் வங்கியின் அறிவிப்பு. இதற்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் அஸ்வினிகுமார் உபாத்யாய வழக்கு தொடர்ந்தார். ஆனால் ரூ.2,000 நோட்டு விவகாரம் என்பது அரசின் கொள்கை முடிவு. இதில் ஆய்வு செய்யக் கூடிய மேல்முறையீட்டு ஆணையம் அல்ல நீதிமன்றம் என கூறி அஸ்வினிகுமார் மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் டிஸ்மிஸ் செய்தது. இதனைத் தொடர்ந்து அஸ்வினி குமார் உபாத்யாய, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தார். அம்மனு, நீதிபதிகள் சுதான்ஷூ துலியா, விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பாக விசாரணைக்கு வந்தது. இதனை அவசர வழக்காக விசாரிக்கவும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் மறுத்திருந்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் உச்சநீதிமன்றத்தின் அனிருதா போஸ், ராஜேஷ் பிண்டல் பெஞ்ச் முன்பாக மீண்டும் அஸ்வினி உபாத்யாய ஆஜராகி தமது மேல்முறையீட்டு மனுவை அவசர வழக்காக விசாரிக்க கோரினார். அப்போது அதிருப்தி அடைந்த நீதிபதிகள், ஏற்கனவே ஒரு பெஞ்ச்சில் தாக்கல் செய்த மனுவை மீண்டும் ஏன் இப்போது கொண்டு வருகிறீர்கள் என கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அஸ்வினி குமார் உபாத்யாய, ரூ. 2,000 நோட்டுகளை மாவோயிஸ்டுகள், பயங்கரவாதிகள் தடையின்றி மாற்றி வருகின்றனர். இதுவரை ரூ. 80,000 கோடி அளவுக்கு ரூ. 2,000 நோட்டுகள் மாற்றப்பட்டுவிட்டன. ஆகையால்தான் அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றார். ஆனால் இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள் உச்சநீதிமன்ற பதிவாளர் அலுவலகம் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டனர். இந்த நிலையில் இன்று மீண்டும் தமது மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என மனுதாரர் வலியுறுத்தினார். இதனை உச்சநீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது.