அரசு பஸ்களில் பெண்கள் இலவச பயணம் திட்டத்தை தொடங்கி வைத்தார் சித்தராமையா!

கர்நாடகத்தில் இன்று முதல் அரசுப் பேருந்துகளில் மகளிர் இலவசமாக பயணிக்கலாம் என அறிவித்து தங்களது 5 முக்கிய வாக்குறுதிகளில் முதல் வாக்குறுதியை காங்கிரஸ் அறிமுகப்படுத்தியுள்ளது.

அரசுப் பேருந்துகளில் இலவசமாக மகளிர் பயணம் மேற்கொள்ளும் சக்தி என்ற இந்த திட்டத்தினை கர்நாடக முதல்வர் சித்தராமையா இன்று (ஜூன் 11) தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் மூலம் ஒவ்வொரு நாளும் 41.8 லட்சத்துக்கும் அதிகமான மகளிர் பயனடைவர். இதனால் அரசுக்கு ஆண்டுக்கு 4,051.56 கோடி செலவாகும். இந்த திட்டத்தின் கீழ் பயனடைய சக்தி ஸ்மார்ட் அட்டை அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும், சக்தி திட்டத்தின் இலச்சினையும் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் பயனடைய சேவா சிந்து என்ற அரசு தளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். ஏழை மற்றும் நடுத்தர வர்க்க மக்கள் இத்திட்டத்தின் கீழ் பெரிதும் பயனடைவர்.

இத்திட்டத்தினை தொடங்கி வைத்து முதல்வர் சித்தராமையா பேசியதாவது:-

நாங்கள் இன்று சக்தி திட்டத்தை கர்நாடகம் முழுவதும் செயல்படுத்தியுள்ளோம். வாக்குறுதிகள் குறித்து மக்களிடம் பொய்யான தகவலை எதிர்க்கட்சிகள் பரப்புகின்றன. எங்களது மற்ற வாக்குறுதிகளும் குறிப்பிட்ட காலத்தில் சரியாக செயல்படுத்தப்படும் என்றார்.

இந்த நிகழ்ச்சியில் கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.