எல்லா நடவடிக்கைகளும் இந்தியில் தான் இருக்க வேண்டும் என்று மத்திய அரசு சுற்றறிக்கை விடுத்துள்ளதாக மதுரை எம்.பி சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் வேலூர் மாவட்டத்தில், ‘9 ஆண்டுகள் சாதனை விளக்க பொதுக்கூட்டத்தை’ பாஜக சமீபத்தில் நடத்தியது. இதில் அமித்ஷா பங்கேற்றிருந்தார். இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், “பாஜகவை தமிழுக்கு எதிரான கட்சியாக திமுக திட்டமிட்டு கட்டமைத்து வைத்திருக்கிறது. தமிழ் வளர்ச்சிக்கு பாஜக ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி இருக்கிறது. செம்மொழி தமிழாய்வு நிறுவனம், தமிழில் குடிமைப்பணிகள் தேர்வுகள், தமிழில் நீட் தேர்வு என தமிழுக்கு பாஜக ஏராளமான தொண்டாற்றியுள்ளது. எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தல்களில் தமிழகத்தில் இருந்து ஒருவர் இந்த நாட்டின் பிரதமராக வரவேண்டும் என நினைக்க வேண்டும். கட்சி அதற்காக உழைக்க வேண்டும்” என்று பேசியிருந்தார். நாடு சுதந்திரமடைந்ததிலிருந்து தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் யாரும் இதுவரை பிரதமரானதில்லை. மாறாக குடியரசுத் தலைவராக மூன்று பேர் பதவி வகித்துள்ளனர். எனவே தமிழ்நாட்டிலிருந்து ஓர் பிரதமர் வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு நீண்ட காலமாக நீடித்து வருகிறது. இந்த எதிர்பார்ப்பைதான் அமித்ஷாவின் பேச்சு தூண்டியிருக்கிறது.
இது ஒருபுறம் இருக்க, மறுபுறம் பாஜக தமிழ் மொழியை புறக்கணித்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற தொகுதி உறுப்பினரான சு.வெங்கடேசன் இது குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். அதாவது, “தமிழரை பிரதமராக்க வேண்டும் என்று பேசிவிட்டு, எல்லா நடவடிக்கைகளும் இந்தியில்தான் இருக்க வேண்டும் என்று இன்று சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இது தான் பாஜக. இந்த ஏமாற்று வேலை அவர்களுக்கு புதிதல்ல, எப்படி வேடம் தரித்தாலும் அவர்களை கண்டுக்கொள்வது தமிழ்நாட்டுக்கும் புதிதல்ல” என்று டுவீட் செய்திருக்கிறார்.
அந்த டுவிட்டில் இணைக்கப்பட்டுள்ள அறிக்கையில், “தமிழர் எதிர்காலத்தில் பிரதமராக வருவார் என்று கூறும் உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்களே! உங்கள் அமைச்சகம் இந்தியை விதிகளை மீறி தமிழ்நாட்டில் திணிப்பதை முதலில் நிறுத்துங்கள். உங்கள் பொறுப்பில் உள்ள அலுவல் மொழி அமலாக்கம் எப்படி நடைபெறுகிறது பாருங்கள்! அரசு நிறுவனமான நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் வெளியிட்டுள்ள சுற்றறிக்கை அலுவல் மொழி விதிகள் விதி எண் 5 ஐ 100 % அமலாக்கச் சொல்லி இந்தி பயன்பாட்டை வலியுறுத்துகிறது. ஆனால் அலுவல் மொழி விதிகள் பிரிவு 1 (ii) மிகத் தெளிவாக தமிழ்நாட்டிற்கு அது பொருந்தாது என்று கூறுவதை தாண்டி 5 வது பிரிவை பேசும் கபடம் அரங்கேறுகிறது. AD G.S.R 1052 – In exercise of the powers conferred by section 8, read with sub-section (4) of section 3 of the Official Languages Act, 1963 (19 of 1963), the Central Government hereby makes the following rules. namely : 1) Short title, extent and commencement – i) These rules may be called the Official Languages (Use for Official purposes of the Union) Rules, 1976. ii) They shall extend to the whole of India, except the State of Tamilnadu. iii) They shall come into force on the date of their publication in the Official Gazette.
தமிழைக் காவு கொடுத்து விட்டு தமிழர் பிரதமர் ஆவார் என்று உங்கள் ஆசை வார்த்தைகளுக்கு தமிழை நேசிக்கிற ஒரு தமிழர் கூட ஏமாற மாட்டார். முதலில் நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் நிறுவன அதிகாரிகளுக்கும், உங்கள் அலுவல் மொழி அமலாக்க குழுவிற்கும் ஒன்றை சொல்லுங்கள். “அலுவல் மொழி விதி 1 (II) காட்டி தமிழ்நாட்டிற்குள் நுழையாதீர்கள்” என்று. தமிழ்நாட்டில் உள்ள இந்தி அமலாக்க செல்களை கலையுங்கள்” என்று கூறியுள்ளார்.