உயர்நீதிமன்றத்தின் உத்தரவால் தமிழ்நாட்டில் 560 பார்களை மூடும் நிலை ஏற்பட்டு வருவாய் இழப்பு ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் மதுபானக் கடைகளுக்கு அருகே தின்பண்டங்கள் விற்பனை செய்வது, காலி மதுபான பாட்டில்களை சேகரிப்பது தொடர்பான பார் உரிமங்களுக்கு டெண்டர் விண்ணப்பங்களை வரவேற்று டாஸ்மாக் நிர்வாகம் அறிவிப்பாணை வெளியிட்டது. இந்த அறிவிப்பாணையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற தனி நீதிபதி, இந்த வழக்கில் இறுதி உத்தரவு பிறப்பிக்கும் வரை டாஸ்மாக் பார்களுக்கான டெண்டரை இறுதி செய்யக்கூடாது என உத்தரவு பிறப்பித்து இருந்தார். தனி நீதிபதி பிறப்பித்த இந்த உத்தரவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதில், தனி நீதிபதியின் உத்தரவு காரணமாக தமிழ்நாடு முழுவதும் 560 பார்களை மூட வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்து இருக்கிறது. இதன் காரணமாக அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளதால் வழக்கை விரைவில் விசாரிக்க வேண்டுமென தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன் தலைமை நீதிபதி அமர்வில் முறையிட்டு இருந்தார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் வரும் 19 ஆம் தேதி வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக தெரிவித்து உள்ளனர்.