ரெய்டு முடிந்தவுடன் இது குறித்து விளக்கமளிக்கிறேன்: அமைச்சர் செந்தில் பாலாஜி!

அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டிலும் அவருக்குத் தொடர்புடைய இடங்களிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் ரெய்டு நடத்தி வரும் நிலையில், ரெய்டு முடிந்தவுடன் இது குறித்து விளக்கமளிக்கிறேன் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

முன்பு அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. அந்த சமயத்தில் போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றியதாகப் புகார்கள் எழுந்தன. இது குறித்த விசாரணைக்குச் சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடையைச் சமீபத்தில் உச்சநீதிமன்றம் ரத்து செய்த நிலையில், இது குறித்த விசாரணை இப்போது மீண்டும் தீவிரமடைந்துள்ளது. இந்தச் சூழலில் தான் இன்று சென்னை, கரூரில் உள்ள செந்தில் பாலாஜி மற்றும் அவருக்குத் தொடர்புடையவர்கள் வீடுகளில் அமலாக்கத் துறையினர் ரெய்டு நடத்தி வருகின்றனர். கடந்த மே மாதம் தான் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடையோர் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியிருந்தனர். இந்தச் சூழலில் தான் இப்போது அமலாக்கத் துறை அதிகாரிகள் ரெய்டு நடத்துகிறார்கள். சென்னையில் பசுமை வழிச்சாலையில் அமைந்துள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் அரசு இல்லத்திலும் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இன்று காலை முதல் ரெய்டு தொடர்ந்து வருகிறது. அமைச்சர் செந்தில் பாலாஜி வாக்கிங் சென்ற போது, அதிகாரிகள் ரெய்டிற்கு வந்துள்ளனர். இது குறித்த தகவல் தெரிந்தவுடன் அமைச்சர் செந்தில் பாலாஜி வாக்கிங்கை பாதியில் முடித்துக் கொண்டு திரும்பியுள்ளார்.

இந்த ரெய்டு குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார். முன்பு கரூரில் ரெய்டு நடந்த போது, போலீசாருக்கு அது குறித்து முன்கூட்டியே தகவல் தெரிவிக்கவில்லை என்றும் இதனால் போலீசாரால் உரியப் பாதுகாப்பு வழங்க முடியவில்லை என்றும் புகார் எழுந்தது. இந்த முறை ரெய்டு குறித்த தகவல் தெரிவிக்கப்பட்டதா என்று செய்தியாளர் கேட்ட கேள்விக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி, “எனக்கு அவர்கள் தகவல் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. சட்டப்படி தகவல் சொல்லவும் மாட்டார்கள். நான் வாக்கிங் சென்றிருந்தேன். அப்போது தான் ரெய்டு குறித்துத் தெரிவித்திருந்தார்கள். இதையடுத்து கூட வந்த நண்பர்களை அப்படியே அனுப்பிவிட்டு இங்கே திரும்பினேன். வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனைக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பை அளித்தோம். இப்போது அமலாக்கத் துறையினர் ரெய்டிற்கு வந்துள்ளதாகக் கூறுகிறீர்கள். நண்பர்கள் இது குறித்துக் கூறிய பின்னரே ரெய்டு குறித்துத் தெரியும். வாக்கிங்கை பாதியில் முடித்துக் கொண்டு டாக்ஸி பிடித்து வந்துள்ளேன். ரெய்டு முடிந்ததும் பேசுகிறேன்:

என்ன நோக்கத்திற்காக வந்துள்ளனர். என்ன தேடுகிறார்கள் என்பதைப் பார்ப்போம். ரெய்டு முடிந்த பிறகு இது குறித்து விரிவாகப் பேசுகிறேன். வருமான வரித்துறை அதிகாரிகள் என்ன கைப்பற்றினர் என்பதை அவர்களே அறிக்கை தெரிவித்துள்ளனர். இப்போது எங்கெல்லாம் ரெய்டு நடத்துகிறார்கள் என்பது குறித்து எனக்குத் துல்லியமாகத் தெரியாது. வருமான வரித்துறை அதிகாரிகள், அமலாக்கத் துறை அதிகாரிகள் என யார் சோதனைக்கு வந்தாலும் முழு ஒத்துழைப்பு அளிக்கப்படும். அவர்கள் எந்தவொரு ஆவணத்தைக் கைப்பற்றி விளக்கம் கேட்டாலும் அதற்கு விளக்கம் கொடுக்கவும் தயார். ரெய்டு முடிந்தவுடன் இது குறித்து விளக்கமளிக்கிறேன்” என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.