செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத் துறை விசாரணை நடத்தியது மனித உரிமை மீறல்: ரகுபதி

அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத் துறை விசாரணை நடத்தியது முழுக்க முழுக்க மனித உரிமை மீறல் என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

தமிழக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில் நேற்று காலை முதல் அமலாக்கத் துறை சோதனை நடைபெற்றது. அவருடைய சென்னை, கரூர் வீட்டில் சோதனை நடந்தது. இந்த 17 மணி நேர சோதனை நிறைவடைந்த நிலையில் நள்ளிரவு செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறையினர் கைது செய்தனர். அப்போது அவர் நெஞ்சை பிடித்துக் கொண்டு சாய்ந்தார். உடனே அவரை அமலாக்கத் துறையினர் ஓமந்தூரார் மருத்துவமனையில் சேர்த்தனர். அவர் அங்கு ஐசியூவில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து அதிர்ச்சி அடைந்த திமுகவினர் செந்தில் பாலாஜியின் கைதை கண்டித்தனர். மேலும் அமைச்சர்களும் அவரை பார்க்க மருத்துவமனைக்கு சென்றனர்.

இந்த நிலையில் ஐசியூவில் உள்ள செந்தில் பாலாஜி குறித்து எம்பி என்.ஆர்.இளங்கோ கூறுகையில், செந்தில் பாலாஜியை பார்க்க அமலாக்கத் துறை யாரையும் அனுமதிக்கவில்லை. அமைச்சர் செந்தில் பாலாஜியை வீட்டுக்குள் வைத்து விசாரணை நடத்தினர். அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டாரா என தெரியவில்லை. அமலாக்கத் துறையினரின் கட்டுப்பாட்டில் செந்தில் பாலாஜி உளளார். அமலா்கத் துறையின் கட்டுப்பாட்டில் இருப்பதால் முன்ஜாமீன் தாக்கல் செய்ய இயலாது. எந்த வழக்குகாக அமைச்சர் செந்தில் பாலாஜியை அழைத்து சென்றார்கள் என தெரியவில்லை என்றார்.

இதுகுறித்து அமைச்சர் ரகுபதி கூறுகையில், முழுக்க முழுக்க இது மனித உரிமை மீறிய செயல். திட்டமிட்டு பழிவாங்கும் நோக்கத்தோடு சோதனை நடத்தப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைக்கு காரணமானவர்கள் நீதிமன்றத்தில் பதில் சொல்ல வேண்டும். எந்த காரணத்திற்காக அமலாக்கத்துறை வந்தது என தெரிந்தால் மட்டுமே அடுத்தகட்ட நடவடிக்கையை மேற்கொள்ள முடியும் என்றார்.