அரசு மருத்துவமனையில் தரமான சிகிச்சை அளிக்கப்படும் போது செந்தில் பாலாஜிக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை கோருவது ஏன் என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.
அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். தற்போது நெஞ்சுவலி காரணமாக ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் சர்ஜரி சிகிச்சை மேற்கொள்ள மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர். செந்தில் பாலாஜி தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனு இன்று பிற்பகலில் விசாரணைக்கு வர உள்ளது. அதேபோல், செந்தில் பாலாஜிக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கக் கோரி அவரது குடும்பத்தினர் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் அரசு மருத்துவமனையில் தரமான சிகிச்சை அளிக்கப்படும் போது தனியார் மருத்துவமனையில் சிகிச்சை கோருவது ஏன்? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-
இந்த விவகாரம் ஒவ்வொருவரின் தனிமனித விருப்பம். அந்த விருப்பத்தில் யாரும் தலையிட முடியாது. செந்தில் பாலாஜியை கைது செய்த உடன் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்கள். அங்கு ஆஞ்சியோ செய்ததில் அவருக்கு இரத்த நாளங்களில் 3 இடங்களில் அடைப்பு இருப்பது கண்டறியப்பட்டது. 80, 90 சதவிகிதம் அளவுக்கு பிளாக்ஸ் உள்ளது. உடனடியாக அறுவை சிகிச்சை செயய் வேண்டும் என்று அரசு மருத்துவர்கள் சொல்லியிருக்கிறார்கள். உடனே செந்தில் பாலாஜியின் துணைவியார் இரண்டாவது மருத்துவ ஆலோசனையும் கேட்டார்கள். உடனடியாக அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து இரண்டாவது ஆலோசனையும் பெறப்பட்டது. அதில் அவரும் உடனடியாக ஆபரேஷன் செய்ய வேண்டும் என்றனர். அமலாக்கத்துறையும் இ.எஸ்.ஐ மருத்துவர்களை அழைத்தது. அந்த மருத்துவர்களும் இதை உறுதி செய்தார்கள். இப்போது அவரது மனைவி அப்பல்லோ அல்லது காவேரியில் ஆபரேஷன் பண்ண வேண்டும் என்று சொன்னார்கள். அவர்களுடைய தனிமனித விருப்பத்தைதான் நிறைவேற்ற வேண்டுமே தவிர யாரையும் நாம் கட்டாயப்படுத்த முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.