செந்தில் பாலாஜியை காவேரி மருத்துவமனைக்கு மாற்ற நீதிபதிகள் அனுமதி வழங்கினர்.
அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்ததையடுத்து, அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் உடனடியாக சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவரது இதய ரத்தக் குழாய்களில் அடைப்புகள் இருப்பதாகவும், பைபாஸ் சர்ஜரி செய்ய வேண்டும் என்றும் மருத்துவர்கள் கூறி உள்ளனர். அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதில் சட்டப்பூர்வ நடைமுறை பின்பற்றப்படவில்லை என திமுக தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது.
செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா சார்பில் ஆட்கொணர்வு மனுவை மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ நேற்று சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்தார். நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்கரவர்த்தி அமர்வில் ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை நடைபெற்றது. அப்போது, மருத்துவ பரிசோதனையில் செந்தில் பாலாஜிக்கு இதயத்தில் 3 அடைப்புகள் கண்டறியப்பட்டுள்ளது. பைபாஸ் அறுவை சிகிச்சை உடனடியாக நடத்த மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர். இதனால் தனிப்பட்ட மருத்துவ சிகிச்சை வழங்க அனுமதிக்க வேண்டும் என்று செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அமலாக்கத்துறை, ஏற்கனவே செந்தில் பாலாஜி நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டதால் ஆட்கொணர்வு மனு செல்லத்தக்கதல்ல. எந்தவிதமான இடைக்கால உத்தரவையும் கோர முடியாது. ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்ததல்ல. சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டம் சிறப்பு சட்டம் என்பதால், குற்ற விசாரணை முறைச் சட்டம் பொருந்தாது. நீதிமன்ற காவலில் வைத்த உத்தரவு சரியா, இல்லையா? என உயர்நீதிமன்றத்தில் கேள்வி எழுப்ப முடியாது. மேலும், தமிழக மருத்துவக்குழு அளித்த அறிக்கையில் நம்பிக்கை இல்லை என அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், செந்தில் பாலாஜியை காவேரி மருத்துவமனைக்கு மாற்ற அனுமதி வழங்கினர். அத்துடன், ஆட்கொணர்வு மனுவுக்கு பதில் அளிக்கும்படி அமலாக்கத்துறைக்கு உத்தரவு பிறப்பித்தனர். அமலாக்கத்துறை நியமிக்கும் மருத்துவர் குழுவும் செந்தில் பாலாஜியின் உடல்நிலை குறித்து ஆராயலாம் என தெரிவித்த நீதிபதிகள், ஆட்கொணர்வு மனு மீதான விசாரணையை 22ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.