உடல் நிலை பாதித்த தொண்டரை தலைவர் பார்ப்பதில் என்ன தவறு உள்ளது. திமுக மற்றும் முதல்வரை தவறாக பேசுவதை எடப்பாடி பழனிசாமி நிறுத்த வேண்டும் என்று திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி தெரிவித்துள்ளார்.
தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. மத்திய பாஜக அரசின் தூண்டுதலால்தான் அமைச்சர் கைது செய்யப்பட்டு உள்ளதாக தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி கண்டனம் தெரிவித்து வருகின்றன. செந்தில் பாலாஜி கைது விவகாரம் தமிழக அரசியலில் கடந்த சில தினங்களாக அனலாக தகித்து கொண்டு இருக்கும் நிலையில், திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின், நேற்று ஒரு வீடியோவை வெளியிட்டு இருந்தார். அதில், திமுகை சீண்டிப்பார்க்க வேண்டாம் என கடுமையான எச்சரிக்கை விடுத்து இருந்தார். அது மட்டும் இன்றி அதிமுகவையும் விமர்சித்து இருந்தார். இதற்கு பதிலடியாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று வீடியோ வெளியிட்டு திமுகவை கடுமையாக விமர்சித்தார்.
இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமிக்கு பதிலளிக்கும் வகையில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
எடப்பாடி பழனிசாமி தான் ஏதோ அமலாக்கத்துறை விசாரணை அதிகாரி போல ஒரு பேட்டியை கொடுத்து இருக்கிறார். அமலாக்கத்துறை சோதனை குறித்து பேச எடப்பாடிக்கு தார்மீக உரிமை இல்லை. ஆனால், அமலாகக்த்துறை அதிகாரி போல அவர் பேசுகிறார். செந்தில் பாலாஜி வீட்டு முன் என்ன நடந்தது என்பதை அனைவரும் பார்த்தார்கள். நள்ளிரவில் கைது செய்யப்பட்டு செந்தில் பாலாஜி துன்புறுத்தப்படுகிறார். குடிப்பதற்கு தண்ணீர் கூட கொடுக்க முடியாத நிலை உள்ளது என எங்களுக்கு தகவல் கிடைத்த உடன், உடனடியாக செந்தில் பாலாஜியை சந்திக்க முதல்வர் எங்களை அனுப்பி வைத்த்தார். அதன்படி நானும் பரந்தாமனும் சென்றோம். அவரை சந்திக்க அனுமதி கொடுக்கப்படவில்லை. நான் நினைத்தபடியே நடந்து விட்டது. ரெய்டு பற்றி நாங்கள் கவலைப்படவே இல்லை. எந்த விதமான விசாரணை வேண்டும் என்றாலும் யார் வேண்டுமானாலும் நடத்தட்டும் என்று முதல்வரே சொல்லியிருக்கிறார். ஆனால் மனித நேயத்துடன் நடைபெற வேண்டும். உரிய நேரத்தில் மருத்துவமனை சென்றதால் செந்தில் பாலாஜிக்கு மூன்று அடைப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கொஞ்சம் காலதமாதம் ஆகியிருந்தால் என்ன ஆகியிருக்கும். இதற்கு எடப்பாடி பழனிசாமி நாடகமாடுவதாக கூறுகிறார்.
முதல்வரின் பேச்சுக்கு பதில் கூற முடியாமல் எதையோ பேசுகிறார் எடப்பாடி பழனிசாமி. ரூ.1.5 கோடிக்கு இட்லி சாப்பிடும் கூட்டம் இல்லை நாங்கள். பாஜக மிரட்டலுக்கு பயந்தே ஜிகே வாசனுக்கு மாநிலங்களவை சீட் விட்டுக்கொடுத்தது அதிமுக. உடல் நிலை பாதித்த தொண்டரை தலைவர் பார்ப்பதில் என்ன தவறு உள்ளது. வேலுமணி, தங்கமணி வீட்டில் ரெய்டு நடந்த போது டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்தார் எடப்பாடி பழனிசாமி. திமுக மற்றும் முதல்வரை தவறாக பேசுவதை எடப்பாடி பழனிசாமி நிறுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.