அமைச்சரவையில் யாருக்கு எந்த துறையை ஒதுக்குவது என்ற அதிகாரம் முதல்வருக்கு மட்டுமே உள்ளது என்று சபாநாயகர் அப்பாவு கூறியுள்ளார்.
சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜிக்கு இதய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதயத்தில் 90 சதவிகித அடைப்பு உள்ளதால் காவேரி மருத்துவமனையில் செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜி வகித்த துறைகளை பிற அமைச்சர்களுக்கு மாற்ற ஆளுநருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரை செய்திருந்தார். முதலமைச்சரின் பரிந்துரையை ஏற்காமல், முதலமைச்சரின் பரிந்துரை கடிதத்திற்கு விளக்கம் கேட்டு ஆளுநர் ரவி திருப்பி அனுப்பினார். பரிந்துரை கடிதத்தில் முதலமைச்சரின் காரணத்தை “Misleading & Incorrect” என ஆளுநர் ஏற்க மறுத்தார். செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்திருப்பதை ஏன் குறிப்பிடவில்லை என்றும் வினவியிருந்தார்.
ஆளுநர் ஆர்.என்.ரவி செயலுக்கு பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்கள் வலுத்து வருகிறது. அமைச்சரவை மாற்றம் குறித்து ஆளுநர் கேட்டுள்ள விளக்கம் குறித்து சபாநாயகர் அப்பாவுவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த சபாநாயகர் அப்பாவு, அரசியல் சட்டத்திற்கு விரோதமாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்படுகிறார் என்று கூறினார். அமைச்சர்களின் இலாகாவை மாற்ற முதலமைச்சருக்கே அதிகாரம் உள்ளது. முதலமைச்சரின் அதிகாரத்தில் யாரும் தலையிட முடியாது, சட்டம் அதைத்தான் சொல்கிறது என்றும் தெரிவித்தார்.
முதல்வரின் பரிந்துரையை ஆளுநர் திருப்பி அனுப்பியது தேவையற்றது, தவிர்த்திருக்கலாம். யாருக்கு என்ன துறை என்பதை முடிவு செய்யும் அதிகாரம் முதல்வருக்கே உள்ளது. வழக்கு இருப்பதாலேயே ஒருவரை அமைச்சரவையில் இருந்து நீக்கத் தேவையில்லை. நீதிமன்ற காவல், வழக்கு நிலுவையில் இருந்தால் அமைச்சர் பதவியில் இருக்கக்கூடாதென சட்டத்தில் இல்லை என்றும் கூறினர். குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை அறிவிக்கப்பட்டால் மட்டுமே அமைச்சரவையில் இருந்து நீக்க முடியும் என்றும் சபாநாயகர் தெரிவித்துள்ளார்.