திமுக அரசு, திமுகவிற்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு ஒன்றிய அரசு விசாரணை அமைப்புகளை ஏவுகின்றன என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தாலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டது முற்றிலும் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இது ஒருபக்கம் இருக்க கைதாகி நீதிமன்றக் காவலில் இருக்கும் செந்தில் பாலாஜி பைபாஸ் சர்ஜரி சிகிச்சைக்காக காவேரி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதன் காரணமாக அமைச்சர் செந்தில் பாலாஜியை இலாக்கா இல்லாத அமைச்சராக மாற்ற முதல்வர் ஸ்டாலின் முடிவு எடுத்துள்ளார். இது தொடர்பாக நேற்று முதல்வர் ஸ்டாலின் எழுதிய பரிந்துரையை ஆளுநர் ஆர். என் ரவி ஏற்கவில்லை. முதல்வர் ஸ்டாலின் மீண்டும் ஆளுநருக்கு இது தொடர்பாக பரிந்துரை எழுதி உள்ளார். ஆளுநரின் இந்த செயல்பாடு விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
இந்த நிலையில், ஆளுநரின் போக்கு திமுகவுடன் நேரடியாக மோதுவது என்ற நிலைப்பாட்டை எடுத்து இருப்பதை காட்டுவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தொல் திருமாவளவன் கூறியதாவது:-
ஆளுநருடைய போக்கு நேரடியாகவே அவர் திமுகவுடன் மோதுவது என்ற நிலைப்பாட்டை எடுத்துள்ளார் என்பதை காட்டுகிறது. எந்த வகையிலும் இது ஏற்புடையது இல்லை. அரசமைப்பு சட்டத்திற்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கிறார். இங்கு ஒரு குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும். அரசுக்கும் மக்களுக்கும் இடையே இடைவெளி ஏற்படுத்த வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு ஆளுநர் செயல்படுகிறார்.
அமைச்சர்களை தீர்மானிப்பது , அமைச்சர்களுக்கு எத்தகைய துறைகளை ஒதுக்குவது என்பது முதல்வருக்கு உள்ள சுதந்திரம் அதிகாரம். முதல்வர் பரிந்துரைப்பதை அப்படியே அங்கீகரிப்பது ஆளுநரின் கடமை. அதுதான் இதுவரை பின்பற்றப்படும் மரபு. ஆனால் இதை ஆளுநர் மறுதலிக்கிறார் என்பது திமுகவோடு நேரடியாக மோதுவதற்கு தயாராகிவிட்டோம் என்பதை இந்திய ஒன்றிய அரசு ஆளுநர் மூலமாக உணர்த்துகிறது என கருத வேண்டியுள்ளது. தமிழக முதல்வர் எதையும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம் என ஏற்கனவே அறிவித்துள்ளார். மீண்டும் ஆளுநருக்கு முதல்வரின் பரிந்துரை கடிதம் போயிருக்கிறது. ஆளுநர் என்ன முடிவு எடுப்பார் என்று பொறுத்திருந்து பார்ப்போம். ஆளுநரின் போக்கு எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாத அரசமைப்பு சட்டத்திற்கு எதிரான போக்கு. இதை விடுதலை சிறுத்தைகள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.
ஒன்றிய அரசு திமுக அரசு திமுகவிற்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு விசாரணை அமைப்புகளை ஏவுகின்றன. செந்தில் பாலாஜி மீது ஏற்கனவே வழக்கு இருப்பது அனைவரும் அறிந்த உண்மைதான். இத்தனை ஆண்டுகளாக அதை தூசி தட்டி எடுக்காதவர்கள் நடவடிக்கை எடுக்க முனையாதவர்கள் உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்ற சாக்கு போக்கை வைத்து இந்த நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது. முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு மோடி அரசு வைக்கிற செக்மேட் ஆக என்றுதான் கருதப்படுகிறது. அரசியல் உள்நோக்கத்தோடு பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுகிறார்கள் என்பதை உணர முடிகிறது. இவ்வாறு அவர் கூறினார்.