பெலாரஸ்க்கு அணுஆயுதங்களை நகர்த்தும் வேலைதொடங்கிவிட்டது ரஷ்யாவை தோற்கடிக்க முடியாது என்பதை நினைவூட்டவே இந்த நடவடிக்கை என்று ரஷ்ய அதிபர் புதின் கூறியுள்ளார்.
உக்ரைன்- ரஷ்யா இடையிலான போர் ஒன்றரை வருடத்திற்கு மேலாக நடைபெற்று வருகிறது. உக்ரைனின் தெற்கு பிராந்தியத்தில் பெரும்பாலான இடங்களை ரஷ்யா ஆக்கிரமித்துள்ளது. தோராயமாக 5-ல் ஒரு பகுதியை ரஷ்யா கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது. அதை மீட்பதற்காக உக்ரைன் தற்போது பதில்தாக்குதல் நடத்தி வருகிறது. டிரோன் மூலம் தாக்குதல் நடத்துவதால் ரஷ்யப் பகுதியில் சேத்திற்குள்ளாகி வருகிறது. உக்ரைன் எதிர்தாக்குதல் அதிகரிக்க, ரஷ்யா மீண்டும் ஏவுகணை தாக்குதல்களை நடத்தி வருகிறது. நேற்று ஆப்பிரிக்கா தலைவர்கள் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கும்போது கிவ் நகர் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. தெற்கு பகுதியில உக்ரைன் எல்லையில் ஒரு குறிப்பிட்ட இடத்தை பிடித்து பாதுகாப்பான பகுதியாக வைத்துக் கொள்ள ரஷ்ய அதிபர் திட்டமிட்டுள்ளார்.
உக்ரைன் போர் தொடங்கியதில் இருந்தே அண்டை நாடான பெலாரஸ் ரஷ்யாவுக்கு உதவி செய்து வருகிறது. உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்கி ரஷ்யாவை தோற்கடிக்க வேண்டும் என மேற்கத்திய நாடுகள் விரும்புகிறது. இதனால் பெலாரஸில் அணுஆயுதங்களை நிலைநிறுத்தி எச்சரிக்கை கொடுக்க புதின் முடிவு செய்தார். பெலாரஸ் அதிபரும் சம்மதிக்க அதற்கான இடத்தை தயார் செய்து வருகிறது ரஷ்யா. அணுஆயுதங்களை வைப்பதற்கான இடத்தை அமைத்தபின், அடுத்த மாதம் 7-ந்தேதியில் இருந்து பெலராஸில் அணுஆயுதங்கள் நிலைநிறுத்தப்படும் என ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்திருந்தார்.
ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் பொருளாதார கூட்டமைப்பில் உரையாற்றிய அதிபர் புதின், முதல் தொகுதி அணு ஆயுதங்கள் நட்பு நாடான பெலாரஸுக்கு அனுப்பிவைக்கப்பட்டு தயார் நிலையில் இருப்பதாகக் கூறினார். அந்நிகழ்ச்சியில் புதின் பேசுகையில், “இப்போதைக்கு அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கான அவசியம் இல்லை என்று கருதுகிறேன். ரஷ்யாவின் பிராந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் வரும்போது மட்டுமே இது பயன்படுத்தப்படும். இருப்பினும் பெலராஸ் நாட்டுக்கு முதல் தொகுதி அணு ஆயுதங்களை அனுப்பிவைத்துள்ளோம். முழுமையாக இந்தக் கோடை முடிவதற்குள் அனுப்பிவைப்போம். பெலாரஸுக்கு அணு ஆயுதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது மேற்குலகுக்கு ஒருவித எச்சரிக்கை. அவர்கள் ரஷ்யாவை தோற்கடிக்க முடியாது என்பதைத் தெரிந்து கொள்ளட்டும். உக்ரைனில் இதுவரை ரஷ்யப் படைகள் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெறவில்லை. ஆனால் உக்ரைன் படைகள் பெரும் சேதத்தை சந்தித்துள்ளன. ரஷ்யப் படைகளை எதிர்கொள்ளும் சக்தி அவர்களுக்கு இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.
பெலாரஸ் நமது நட்பு நாடு. கடந்த பிப்ரவரியில் உக்ரைன் மீதான முதல் தாக்குதல் தொடங்கப்பட்ட பின்னர் பெலராஸில் உள்ள ஏவுதளத்தை ரஷ்யா முக்கியமான தளமாகப் பயன்படுத்தி ஏவுகணைகளை ஏவி வருகிறது. இந்நிலையில், முதல் தொகுதி அணு ஆயுதங்களும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.