திருவாரூரில் இருக்கிற மத்திய பல்கலைக்கழகத்திற்கு கருணாநிதி பெயரை சூட்ட வேண்டும்: வைரமுத்து

திருவாரூர் கருணாநிதி வளர்ந்த ஊர். அந்த திருவாரூரில் இருக்கிற மத்திய பல்கலைக்கழகத்திற்கு கருணாநிதி பெயரை சூட்டுவது தான் சிறந்தது என்று கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார்.

அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க ஸ்டாலினை சந்தித்த பிறகு கவிஞர் வைரமுத்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழ்நாட்டு முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று ஒரு ‘ஒலித்தட்டு” வெளியிட்டு இருக்கிறார். அது ஒலித்தட்டு என்று சொல்வதை விட கருணாநிதி நூற்றாண்டிற்கு கவிஞர்கள் உருவாக்கிய கல்வெட்டு என்று சொல்ல வேண்டும். கல்வெட்டு உருவாக காரணமானவர் அமைச்சர் மா.சுப்பிரமணியன். அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஏற்பாட்டில் நான், கவிஞர்கள் விவேகா, கபிலன், பா. விஜய் உள்ளிட்டோர் எழுதிய கவிதைகளை இசையமைப்பாளர் பரத்வாஜ் இசையமைத்து அதை ஒலித்தட்டாக இன்று முதல்வர் வெளியிட்டு இருக்கிறார். முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் புகழ் பாடுகிற பாடல்கள் மட்டுமல்ல இளைஞர்களுக்கு எழுச்சி தருகிற பாடல்களாகவும் புதிய சமூகத்திற்கு நம்பிக்கை தரும் பாடல்களாகவும் இது இருக்கும்.

கருணாநிதியின் வரலாற்றை தமிழரின் அரசியல் வரலாறு என்று பார்ப்பதோடு தமிழரின் பண்பாட்டு வரலாறு என்று பார்ப்பதோடு புதிய தலைமுறைக்கு நம்பிக்கை தரும் வரலாறு என்று பார்ப்பது தான் கருணாநிதிக்கு நான் செய்யும் மகத்தான காணிக்கையாக இருக்கும் என்று நினைக்கிறேன். கருணாநிதியின் வாழ்க்கையை இளைஞர்களுக்கு, கல்லூரி மாணவர்களுக்கு பாடம் ஆக்க வேண்டும் என்பது எங்கள் லட்சியம். அந்த கனவு இந்த பாடல்களில் இந்த நனவு ஆகியிருப்பதாகவே நாங்கள் நினைக்கிறோம்” என்றார்.

அப்போது செய்தியாளர்கள் வைரமுத்துவிடம் ஓட்டுக்கு காசு வாங்காமல் வாக்களிக்க வேண்டும் என்று விஜய் பேசியது பற்றி கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த வைரமுத்து, “விஜய் பேச்சு குறித்த முழு விவரங்களையும் சொற்களையும் அறியாமல் நான் பேசுவது ஏற்கதகாது” என்றார்.

தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த வைரமுத்து கூறியதாவது:-

திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்திற்கு கருணாநிதி பெயர் சூட்டுவதுதான் மிகச்சரியாக இருக்கும் என முன்பே நான் சொன்னேன். திருவாரூர் கருணாநிதி வளர்ந்த ஊர். அந்த திருவாரூரில் இருக்கிற மத்திய பல்கலைக்கழகத்திற்கு கருணாநிதி பெயரை சூட்டுவது தான் சிறந்தது. என்ன செய்வது அது ஒன்றிய அரசின் கையில் இருக்கிறது. ஆளுநர் என்பவரை நான் எப்படி பார்க்கிறேன் என்றால் எந்த மாநிலத்திற்கு ஆளுநராக ஒருவர் வருகிறாரோ அவர் அந்த மண்ணின் பண்பாட்டோடு கலந்தவராக திகழ வேண்டும். மொழியோடு கலந்தவராக திகழ வேண்டும். அந்த நாட்டின் மக்களின் மனிதாபிமானத்தோடும் மனத்தோடும் கலந்தவராக ஒரு ஆளுநர் திகழ வேண்டும். அப்படி திகழ்வதற்கு நம்முடைய ஆளுநர் ஆர்.என் ரவி முயற்சி செய்வார் என்று நம்புகிறேன்.

நடிகர் விஜய் அரசியல் வருவாரா என்று கேட்கிறீர்கள். அரசியலுக்கு நான் வருவேனா என்று கேட்டால் நான் பதில் சொல்ல முடியும். நடிகர்கள் வருவதைப் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது. அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது என்பதற்கு அமலாக்கத்துறைக்கு உரிமை இருப்பதாகவும் அவர்களுக்கு அந்த அதிகாரம் இருப்பதாகவும் சொல்லி இருக்கிறார்கள். இருக்கட்டும், உங்கள் அதிகாரப்படி கைது செய்து இருக்கிறீர்கள். உங்கள் உரிமைப்படி கைது செய்திருக்கிறீர்கள் என்பதெல்லாம் சரி. கைது செய்த முறை சரியா? அவர் அமைச்சர் அல்லவா? தமிழ்நாட்டு மக்களின் பிரதிநிதி அல்லவா? செந்தில் பாலாஜி என்பவர் ஒரு தனி மனிதரா? இல்லை.. தமிழ்நாட்டு அமைச்சரவையில் ஒரு கேபினட் அமைச்சராக இருக்கிற ஒருவர் தாக்கப்பட்டார், அவமதிக்கப்பட்டார். சம்பந்தப்பட்ட நாட்டு மக்களின் மனதையும் அவர்கள் தங்களின் பூட்ஸ் கால்களால் மிதிக்கிறார்கள் என்று பொருள். அதை நாங்கள் ஏற்றுக் கொள்ள முடியாது. சட்டப்படி தமிழக அரசு சந்திக்கும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. சட்டத்தை சட்டத்தின் மூலமாகவே எதிர்கொள்வார்கள். நீதி கிட்டும் என்று நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.