மாவட்ட கலெக்டரையே உதாசீனப்படுத்தி கீழே தள்ளி விடும் அளவிற்கு திமுகவின் வன்முறை அரங்கேறி வருகிறது என்று எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
ராமநாதபுரத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற அரசு விழாவில் அமைச்சர் ராஜகண்ணப்பன் மற்றும் நவாஸ் கனி எம்.பி. வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரனை கீழே தள்ளிவிட்ட நவாஸ் கனி எம்.பி-யின் உதவியாளர் விஜயராமு மீது 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மாவட்ட விளையாட்டு & இளைஞர் நலத்துறை அலுவலர் தினேஷ்குமார் அளித்த புகாரில் அடிப்படையில் போலீசார் இந்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
ஒரு மாவட்டத்தின் சட்டம் ஒழுங்கிற்கும், நிர்வாக அமைப்புக்கும் முழுப் பொறுப்புடையவர் மாவட்ட ஆட்சியர், அத்தகைய மாவட்ட ஆட்சியரையே உதாசீனப் படுத்தி கீழே தள்ளி விடும் அளவிற்கு இந்த ஆட்சியில் திமுகவின் வன்முறை அரங்கேற்றி வருகிறது, மாவட்ட ஆட்சியரேயே தள்ளி விட்டவர் மீது ஏன் இன்னும்நடவடிக்கை இல்லை. இதுவே அம்மாவின் அரசாக இருந்திருந்தால் இப்படி நடைபெற்றிருக்குமா?. எதேச்சதிகாரத்தில் தன்னிலை மறந்து தரம் தாழ்ந்து நடக்கும் இந்த அரசை மக்கள் துணை கொண்டு விரட்டியடிக்கின்ற காலம் விரைவில் வரும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.