செந்தில்பாலாஜி தம்பிக்கு வருமான வரித்துறை 2 முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகவில்லை!

அமைச்சர் செந்தில்பாலாஜியின் தம்பி அசோக் குமாருக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் 2 முறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகாததால் அடுத்தக் கட்ட நடவடிக்கை குறித்து ஐடி அதிகாரிகள் தீவிரமாக ஆலோசித்து வருகின்றனர்.

அமைச்சர் செந்தில்பாலாஜியின் மூளையாக செயல்படும் அவரது தம்பி அசோக்குமார் வீடு உட்பட 40 இடங்களில் கடந்த மே மாதம் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனை நடத்தச் சென்ற போது தான் அசோக்குமார் இல்லம் முன்பாக பெண் ஐடி அதிகாரியை செந்தில்பாலாஜி ஆதரவாளர்கள் சுற்றி வளைத்தனர். அதேபோல் அதிகாரிகள் சென்ற கார் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்நிலையில் விசாரணைக்கு வருமாறு 2 முறை வருமான வரித்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பியும் அதனை அசோக் குமார் பொருட்படுத்தியதாக தெரியவில்லை. இதனால் அடுத்ததாக என்ன நடவடிக்கை மேற்கொள்ளலாம் என வருமான வரித்துறை தரப்பில் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதனிடையே இவ்வளவு களேபரங்களுக்கு மத்தியில் அசோக்குமார் எங்கு தான் இருக்கிறார் என்ற வினாவும் எழுந்துள்ளது. சொந்த அண்ணன் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு நெஞ்சு வலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த தருணத்தில் கூட அசோக்குமாரை எங்கேயும் பார்க்க முடியவில்லை. அதேபோல் கோவை கண்டனப் பொதுக்கூட்டத்துக்கான ஏற்பாடுகளிலும் அசோக் குமார் தலைகாட்டவில்லை.