கலைஞர் கோட்டம் திறப்பு விழாவிற்கு நிதிஷ் குமார் வருகை ரத்து!

பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமாரின் திருவாரூர் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி, அவரது நினைவா திருவாரூர் அருகே காட்டூரில், ரூ.12 கோடியில் 7,000 சதுரஅடி பரப்பில் தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் கட்டப்பட்டுள்ள கலைஞர் கோட்டம் திறப்பு விழா இன்று நடைபெறுகிறது. இந்த திறப்பு விழாவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை வகிக்கிறார். பீகார் மாநில முதல்வர் நிதிஷ் குமார் கலைஞர் கோட்டத்தை திறந்து வைப்பார், முத்துவேலர் நூலகத்தை பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் திறந்து வைப்பார் என அறிவிக்கப்பட்டிருந்தது. கலைஞர் கோட்டத்தின் திறப்பு விழாவில் பங்கேற்க பீகார் முதல்வர் நிதிஷ்குமார் சிறப்பு விமானம் மூலம் இன்று திருச்சி வருகைத் தந்து, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் திருவாரூர் சென்று, கார் மூலம் காட்டூருக்கு சென்று கலைஞர் கோட்ட திறப்பு விழாவில் பங்கேற்பார் எனத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்நிலையில், திடீரென நிதிஷ் குமார் வருகை ரத்து செய்யப்பட்டுள்ளது. உடல்நிலை சரி இல்லாததால் பீகார் முதல்வர் நிதிஷ் குமாரின் தமிழ்நாடு பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திடீர் உடல்நலக் குறைவால் கலைஞர் கோட்ட திறப்பு விழாவில் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் பங்கேற்காத நிலையில், பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி, அமைச்சர் சஞ்சய் ஜா ஆகியோர் தமிழ்நாடு வருகின்றனர். அவர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொள்ள உள்ளனர். பீகார் முதல்வர் நிதிஷ் குமாருக்கு பதிலாக பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், கலைஞர் கோட்டத்தை திறந்து வைப்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.