காவேரி மருத்துவமனையில் செந்தில்பாலாஜிக்கு 5 மணி நேரம் ஆபரேசன் நடைபெற்றது!

பைபாஸ் ஆபரேசன் செய்யப்பட்டுள்ள செந்தில் பாலாஜியின் உடல் நிலை சீராக இருப்பதாக காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

சென்னை காவேரி மருத்துவமனையில் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு 5 மணி நேரம் ஆபரேசன் நடைபெற்றது. இதயத்திற்கு செல்லும் 3 முக்கிய ரத்தக் குழாய்களில் அடைப்பு இருந்ததால் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் சிகிச்சை செய்ய மருத்துவக்குழு பரிந்துரைத்திருந்தது. அதன்படி, காவேரி மருத்துவமனையில் அதிகாலை 5.15 மணியளவில் இதய அறுவை சிகிச்சை தொடங்கிய நிலையில் 10.15 மணிக்கு சிகிச்சை நிறைவடைந்தது. இதய அறுவை சிகிச்சை நிபுணர் ரகுராமன் தலைமையிலான மருத்துவர்கள் குழு செந்தில்பாலாஜிக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். 5 மணிநேரம் நடைபெற்ற அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நிறைவடைந்தது.

அறுவை சிகிச்சைக்கு பிந்தைய வார்டுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி மாற்றப்பட்டார். செந்தில்பாலாஜி வெண்டிலேட்டர் உதவியுடன் தற்போது மயக்க நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். அடுத்த சில நாட்கள் அமைச்சர் தீவிர சிகிச்சை கண்காணிப்பில் இருப்பார் எனவும் மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

செந்தில்பாலாஜிக்கு அளித்த சிகிச்சை, உடல்நிலை குறித்து காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், தமிழக அரசின் மாண்புமிகு அமைச்சர் வி.செந்தில் பாலாஜிக்கு இன்று காலை முதுநிலை ஆலோசகர் கார்டியோ தொராசிக் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஏ.ஆர்.ரகுராம் மற்றும் அவரது குழுவினரால் இதய துடிப்பு, இதய தமனி பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. நான்கு பைபாஸ் கிராஃப்ட்ஸ் வைக்கப்பட்டு கரோனரி ரிவாஸ்குலரைசேஷன் நிறுவப்பட்டது.
தற்போது அமைச்சர் செந்தில் பாலாஜி உடல்நிலை சீராக உள்ளது மற்றும் அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய இதயத் தீவிர சிகிச்சைப் பிரிவில் பலதரப்பட்ட மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் குழுவால் கண்காணிக்கப்பட்டு வருகிறார் என காவேரிமருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.