தமிழ்நாட்டில் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் ஏற்படுத்துவது மிகவும் அவசியம் எனவும், பல்கலைக்கழகத்திற்கு கவர்னர் ஒப்புதல் அளிக்கவில்லை என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, சென்னை அண்ணாநகரில் உள்ள அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் நேற்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் யோகா பயிற்சி மேற்கொண்டார். இதேபோல, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித்துறை கமிஷனர் மைதிலி கே.ராஜேந்திரன் ஆகியோரும் யோகாசன பயிற்சியில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-
மருத்துவ மையங்கள், பல்வேறு அரசு ஆஸ்பத்திரிகள் என 178 இடங்களில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மட்டும்தான் இந்திய மருத்துவ முறைகளான சித்தா, ஆயுர்வேதா, யோகா, யுனானி, ஓமியோபதி போன்ற 5 வகையான மருத்துவ முறைகளுக்கும் கல்லூரிகள் செயல்படுகின்றது. கொரோனா பேரிடர் காலத்தில் சித்தா கொரோனா மருத்துவ மையம் உருவாக்கப்பட்டு பலருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதல்-அமைச்சராக இருந்தபோது 2006-ம் ஆண்டு சென்னை மாநகராட்சியில் 36 பூங்காக்களில் யோகா மேடைகள் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு இலவச யோகா பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும், சித்த மருத்துவ பல்கலைக்கழகம் தமிழ்நாட்டிற்கு வேண்டும் என்கின்ற வகையில் முதல்-அமைச்சர் சட்டமன்றத்தில் மசோதாவை நிறைவேற்றி அதை கவர்னருக்கு அனுப்பினார். ஆனால், கவர்னர் இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை. தொடர்ச்சியாக கவர்னருக்கு நினைவூட்டல் கடிதம் அனுப்பினாலும், இந்த பல்கலைக்கழகத்தின் வேந்தராக கவர்னர்தான் இருக்க வேண்டும் என்றும், துணை வேந்தர்களை கவர்னர்தான் நியமிக்க வேண்டும் என்றும் பதில் கூறி வருகின்றனர். குஜராத், மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களில் இதுபோன்ற சூழ்நிலை வந்தபோது மாநில முதல்-அமைச்சரே துணை வேந்தர்களை நியமித்து கொள்ளலாம் என்று சட்டத்திருத்தங்கள் செய்யப்பட்டது.
தமிழ்நாட்டு மக்களிடம் சித்த மருத்துவத்திற்கு நிறைய ஆதரவு இருப்பதால், இங்கு சித்த மருத்துவ பல்கலைக்கழகம் ஏற்படுத்துவது மிகவும் அவசியமான ஒன்றாக இருக்கிறது. கவர்னர் ஒப்புதல் அளித்தால் இந்தியாவிலேயே முதல் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் தமிழ்நாட்டில் அமைந்தது என்கின்ற பெருமை கிடைக்கும். மருத்துவ முகாம் அனைத்து துறைகளிலும் சிறப்பாக கலைஞர் நூற்றாண்டு விழாவை நடத்த வேண்டும் என முதல்-அமைச்சர் அறிவுறுத்தி இருக்கிறார். அந்த வகையில் வரும் 24-ந் தேதி அரசு மருத்துவ கல்லூரிகள், அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகள் என 30 துறைகளை ஒருங்கிணைத்து பெரிய அளவில் மருத்துவ முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. அன்றைய தினம் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் சார்பாக 100 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட உள்ளது. காலை முதல் மாலை 5 மணி வரை இம்முகாம்கள் நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.