செந்தில் பாலாஜி வழக்கில் அமலாக்கத்துறையினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிடலாம் என்று தெரிவித்த சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் வழக்கு விசாரணையை ஜூலை 4ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.
காவேரி மருத்துவமனையில் செந்தில் பாலாஜிக்கு இதய அறுவை சிகிச்சை நடைபெற்று வரும் நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்கு அனுமதி அளித்த உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து அமலாக்கத்துறை சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்துள்ளது. இந்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நேற்று நடைபெற்றது.
அதிமுக ஆட்சிகாலமான 2011 முதல் 2015ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி. போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்ததாக புகார் கூறப்பட்டது. அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கை விசாரித்து அறிக்கை தாக்கல் செய்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் 13ஆம் தேதி ரெய்டு நடத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரை நள்ளிரவில் கைது செய்தனர். அப்போது செந்தில் பாலாஜியின் உடல் நிலை பாதிக்கப்பட்டது. நெஞ்சுவலி என கண்களை மூடிக்கொண்டு கதறி துடித்தார். இதனையடுத்து சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் செந்தில் பாலாஜி அனுமதிக்கப்பட்டார். செந்தில் பாலாஜிக்கு இதயத்தில் அடைப்பு இருப்பதாகவும் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் எனவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதனையடுத்து செந்தில் பாலாஜியை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க அனுமதிக்க வேண்டும் என்று அவரது மனைவி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதனையடுத்து உயர்நீதிமன்ற உத்தரவுப்படி அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த 15 ஆம் தேதி இரவு காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். தொடர்ந்து அங்கு மருத்துவர்கள் கண்காணிப்பில் செந்தில் பாலாஜி இருந்து வரும் நிலையில், எட்டு நாட்கள் அவரை அமலாக்கத்துறை கஸ்டடியில் எடுத்து விசாரணை மேற்கொள்ளவும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டார். செந்தில் பாலாஜியை மருத்துவமனையில் மட்டுமே வைத்து விசாரிக்க வேண்டும் வெளியே அழைத்து செல்லக்கூடாது. துன்புறுத்தக்கூடாது என்பன உள்ளிட்ட பல கண்டிசன்களை விதித்துள்ளது. நீதிமன்ற அலுவலகர்கள் மூலம் இந்த உத்தரவு நகல் செந்தில்பாலாஜிக்கு நேரில் வழங்கப்பட்டது. அவரும் உத்தரவு நகலை கையெழுத்திட்டு பெற்றுக்கொண்டார்.
செந்தில் பாலாஜியை காவலில் எடுக்கும்போது அவரிடம் என்னென்ன கேள்விகளை கேட்க வேண்டும்? என அமலாக்கத்துறை அதிகாரிகள் ஏற்கனவே முடிவு செய்து கேள்விகளின் தொகுப்பை தயார்நிலையில் வைத்திருந்தனர். அனுமதி அளித்த 8 நாட்களில் முதல் நாளான 16ஆம் தேதி அவரிடம் எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை. கோர்ட்டு உத்தரவு நகலை அமலாக்கத்துறையினர் பெறுவதற்கும், அந்த உத்தரவு நகலை நீதிமன்ற அலுவலர்கள் செந்தில்பாலாஜியிடம் ஒப்படைத்து கையெழுத்து பெறுவதற்கும், அதன்பின்பு நீதிமன்ற காவலில் இருந்து அமலாக்கத்துறை காவலுக்கு செந்தில்பாலாஜியை எடுத்துக்கொள்வதற்கும் இரவு நீண்ட நேரம் ஆகிவிட்டதால் அன்றைய தினம் செந்தில்பாலாஜியிடம் எந்தவித விசாரணையும் நடத்தப்படவில்லை. அமலாக்கத்துறை விசாரணையின் போது மருத்துவ சிகிச்சைக்கு எந்தவித இடையூறும் ஏற்படுத்தக்கூடாது என நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ள நிலையில் செந்தில் பாலாஜியை டாக்டர்கள் தொடர்ந்து கண்காணித்து சிகிச்சை அளித்து வருவதால் அவரிடம் விசாரணை நடத்துவதில் அமலாக்கத்துறைக்கு சிக்கல் ஏற்பட்டது.
இந்த நிலையில், செந்தில் பாலாஜியை காவேரி மருத்துவமனைக்கு மாற்றிய சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக அப்பீல் செய்யப்பட்டது. உச்ச நீதிமன்றத்தில் கோடைக்கால சிறப்பு அமர்வில் நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு முன்பு இரு தினங்களுக்கு முன்பு ஆஜரான மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள செந்தில் பாலாஜியை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்தது தவறு. அவர் ஓர் அதிகாரமிக்க அமைச்சர் என்பதை நீதிமன்றம் கருத்தில் கொள்ள வேண்டும். மேலும் அவருக்கு எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க அனுமதி கோரியிருந்தோம். அது நிராகரிக்கப்பட்டது. செந்தில் பாலாஜியை 15 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரிய நிலையில் 8 நாட்கள் மருத்துவமனைக்கு வெளியே அழைத்து செல்லாமல் அங்கேயே வைத்து விசாரிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இது சாத்தியமில்லாத ஒன்றாகும். எனவே, செந்தில்பாலாஜியை அமலக்கத் துறை காவலில் எடுத்து விசாரிக்க உச்ச நீதிமன்றம் அனுமதிக்க வேண்டும். மேலும், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டு மனுவை அவசர வழக்காக பட்டியலிட்டு உடனடியாக விசாரிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
இந்த மேல்முறையீட்டு மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்ற அமலாக்கத் துறை கோரிக்கையை நிராகரித்த நீதிபதிகள், ‘அமலாக்கத் துறை மனுவை விசாரணைக்கு ஏற்கிறோம். ஆனால், இது கோடைக்கால சிறப்பு அமர்வு என்பதால், அவசர வழக்காக எடுத்து உடனே விசாரிக்க முடியாது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் ஆலோசனை பெற்று வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிவித்தனர். சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கின் விசாரணை முழுமையாக நிறைவு பெறாமல் நாங்கள் இதில் எப்படி தலையிடமுடியும் என உச்சநீதிமன்றம், அமலாக்கத்துறைக்கு கேள்வியெழுப்பியது. எனினும் அமலாக்கத்துறையின் மேல்முறையீட்டு மனுவை நேற்று புதன்கிழமை விசாரிக்க ஒப்புதல் அளித்தது. இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார். தனது தரப்பை கேட்ட பிறகே அமலாக்கத்துறையின் மேல்முறையீடு மனு மீது உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என மனுவில் மேகலா தெரிவித்துள்ளார்.
இதனிடையே அமலாக்கத்துறை தாக்கல் செய்த அப்பீல் மனு மீதான விசாரணை நேற்று நீதிபதி சூரிய காந்த் தலைமையிலான அமர்வில் விசாரணை நடைபெற்றது. அப்போது உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஒருவர் மருத்துவமனையில் இருக்கும் போது காவலில் எடுத்து விசாரிக்க முடியுமா என அமலாக்கத்துறையினரை பார்த்து கேள்வி எழுப்பினர். அதற்கு அமலாக்கத்துறை சார்பில் வாதிட்ட வழக்கறிஞர், செந்தில் பாலாஜியின் மருத்துவ சிகிச்சையே கேள்வியாக உள்ளது. விசாரணையை தாமதப்படுத்த இவ்வாறு செய்வதாக வாதிட்டார். அதற்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் உடல்நிலை சரியில்லை என மருத்துவ அறிக்கை அளித்த பிறகும் காவலில் எடுக்க கோருகிறீர்களா என்று கேட்டனர். உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அமலாக்கத்துறை அப்பீல் செய்தது அதிருப்தி அளிப்பதாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர். இதனையடுத்து செந்தில் பாலாஜி உடல்நிலை சீரடைந்த பின்னர் விசாரணை நடத்தலாம் எனவும் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை சந்தேகிக்க முடியாது என்றும் கூறினர். செந்தில் பாலாஜி வழக்கில் அமலாக்கத்துறையினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிடலாம் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறையினர் வைத்த கோரிக்கைகளை நீதிபதிகள் நிராகரித்தனர். செந்தில் பாலாஜி வழக்கில் உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடைபெறுவதால் அந்த தீர்ப்புக்கு பிறகு அமலாக்கத்துறை தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை ஜூலை 4ஆம் தேதி நடைபெறும் என்று கூறி வழக்கை நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.