அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடிக்கு இன்று வெள்ளை மாளிகையில் ஜோ பைடன், ஜில் பைடன் தம்பதியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். தனக்கு விருந்தளித்த உபசரித்த ஜோ பைடனுக்கு சந்தன பெட்டியையும் ஜில் பைடனுக்கு வைரக்கல்லையும் பரிசாக அளித்தார் இந்திய பிரதமர் மோடி. சந்தனப்பெட்டியில் இருந்த பொருட்கள் அத்தனையும் இந்திய பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் தானமாக அளித்துள்ளார் மோடி.
பிரதமர் நரேந்திர மோடி நான்கு நாட்கள் அரசு முறை பயணமாக அமெரிக்காவிற்கு சென்றுள்ளார். சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, ஐநா சபை வளாகத்தில் பிரமாண்ட யோகாசன நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலைமை தாங்கினார். இதையடுத்து பிரதமர் மோடி நியூயார்க்கில் இருந்து வாஷிங்டனுக்கு புறப்பட்டார். பின்னர், வாஷிங்டனில் உள்ள ஆண்ட்ரூஸ் விமான தளத்திற்கு வந்தடைந்ததும், பிரதமர் நரேந்திர மோடிக்கு அரசு மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது மழைச்சாரலும் வரவேற்றது. சிறுமிகள் கொடுத்த பூங்கொத்தினை பிரதமர் மோடி பெற்றுக்கொண்டார். மோடியின் அமெரிக்க வருகையை குறிக்கும் வகையில் இரு நாட்டு தேசிய கீதங்கள் விமானப்படை தளத்தில் இசைக்கப்பட்டன. அங்கு பிரதமர் மோடி இரண்டு சிறு குழந்தைகளிடமிருந்து ஒரு பூங்கொத்தை பெற்றார். இதைதொடர்ந்து, அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மனைவி ஜில் பைடனை பிரதமர் மோடி சந்தித்தார். இருவரும் வர்ஜீனியாவின் அலெக்ஸாண்ட்ரியாவில் உள்ள தேசிய அறிவியல் அறக்கட்டளைக்குச் சென்றனர். அங்கு, ஏற்பாடு செய்யப்பட்டிருந்த எதிர்காலத்திற்கான திறன் என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார் மோடி.
நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய பிரதமர் மோடி, “ஒருபுறம் அமெரிக்காவில் உயர்தர கல்வி நிறுவனங்கள் மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பங்கள் உள்ளன. மறுபுறம், இந்தியா உலகின் மிகப்பெரிய இளைஞர் தொழிற்சாலையைக் கொண்டுள்ளது. அதனால்தான், இந்தியா-அமெரிக்க கூட்டாண்மை நிலையான மற்றும் உள்ளடக்கிய உலகளாவிய வளர்ச்சியின் இயந்திரமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன் என்று கூறினார்.
இதனையடுத்து வெள்ளை மாளிகைக்கு காரில் சென்றார் மோடி அப்போது அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் அவரது மனைவி ஜில் பைடனும் உற்சாக வரவேற்பு அளித்தனர். இரு தலைவர்களும் கட்டித்தழுவி அன்பை பரிமாறிக் கொண்டனர். அதன்பின் இருநாட்டு தலைவர்களும் பரிசுகளை பரிமாறிக் கொண்டனர். பிரதமர் மோடி சந்தன கட்டையால் செய்யப்பட்ட கலைவண்ணம் மிக்க பெட்டியை ஜோ பைடனுக்கு பரிசாக வழங்கினார். ஜில் பைடனுக்கு 7.5 காரட் கொண்ட வைரக்கல்லினை பரிசாக அளித்தார். பிரதமர் மோடி பரிசளித்த வைரக்கல் 7.5 கேரட் கொண்டது. இது காற்றாலை மற்றும் சூரிய சக்தியால் உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மோடிக்கு வழங்கிய சந்தனப்பெட்டியில் வெள்ளை எள் உள்ளிட்ட 10 வகையான பொருட்கள் இருந்தன. 80 வயதானவர்களுக்கு தானம் கொடுக்கப்படும் பொருட்கள் அந்த பெட்டியில் இடம் பெற்றிருந்தனவாம். ஜோ பைடன் 80 வயதைக் கடந்தவர் என்பதால் அவருக்கு 10 வகை பொருட்களை பரிசாக அளித்துள்ளார் பிரதமர் மோடி.
பசு தானத்தை குளிக்கும் வகையில் கொல்கத்தாவின் தேங்காய், நிலம் தானத்தை குறிக்கும் வகையில் மைசூரின் சந்தனக்கட்டை, நெய், பட்டுத்துணி, நெல், அரிசி, வெல்லம், குஜராத் உப்பு போன்றவையும் அந்த சந்தனப்பெட்டியில் வைக்கப்பட்டு இருந்தனவாம். வெள்ளி குத்துவிளக்கு, உபநிஷத் ஆங்கில மொழியாக்க புத்தகத்தையும் ஜோ பைடனுக்கு பரிசளித்துள்ளார் பிரதமர் மோடி. அப்போது, விருந்து தயாராக உள்ளது என்று பைடன் கூறியதும், நீங்கள் தான் நீளமான பட்டியலே வைத்திருக்கிறீர்களே என பிரதமர் கூறி, சிரிப்பலையை ஏற்படுத்தினார். பிரதமர் மோடியின் பரிந்துரையை ஏற்று 2023ஆம் ஆண்டை சர்வதேச சிறுதானிய ஆண்டாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்தது. இதை குறிக்கும் வகையில், வெள்ளை மாளிகையில் பிரதமருக்கு அளிக்கப்பட்ட விருந்தில் அதிக அளவிான திணை பொருட்கள் இடம்பெற்றிருந்தன. சாலட், காய்கறிகள் போன்றவையும் அதிக அளவில் விருந்தில் இடம் பெற்றிருந்தன. இரவு விருந்துக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய ஜில் பைடன், தங்களது விருந்தோம்பலை பறைசாற்றும் வகையில் சைவ உணவுகள் தயார் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். சைவ உணவினை ருசித்து சாப்பிட்ட மோடி தனக்கு விருந்தளித்த ஜோ பைடன், ஜில் பைடன் தம்பதியினருக்கு தனது டுவிட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.