இந்தியாவில் இஸ்லாமியர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரின் உரிமைகளை பாதுகாக்காவிட்டால் ஒரு கட்டத்தில் இந்தியா சுக்குநூறாக உடைவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளதாக அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா எச்சரித்துள்ளார்.
இந்திய பிரதமர் மோடி அமெரிக்காவில் அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் நிலையில், பராக் ஒபாமா இந்த கருத்தை தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது:-
மேற்கத்திய நாடுகளை கவலை அடையச் செய்துள்ள சர்வாதிகாரத்தை நோக்கி பிரதமர் மோடி நகர்ந்துள்ளார். இந்தியா என்ற பெரிய இந்து நாட்டில் வரும் இஸ்லாமியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு மோடியிடம் அதிபர் ஜோபிடன் வலியுறுத்த வேண்டும். இந்துக்கள் பெரும்பான்மையாக உள்ள இந்தியாவில் சிறுபான்மையினராக உள்ள இஸ்லாமியர்களின் பாதுகாப்பு குறிப்பிடத்தக்கது. எனக்கு நன்கு அறிந்த பிரதமர் மோடியுடன் நான் உரையாடி இருந்தால், இந்தியாவில் சிறுபான்மையினரின் உரிமைகளை நீங்கள் பாதுகாக்கவில்லை என்றால், ஒரு கட்டத்தில் இந்தியா பிரிந்து செல்வதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது என்பதே எனது வாதத்தின் முக்கிய பகுதியாக இருந்திருக்கும்; அது இந்தியாவின் நலன்களுக்கு எதிரானது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.