பாட்னாவில் எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் செய்தியாளர்கள் சந்திப்பின் போது ராகுல்காந்தியிடம் பேசிய லாலு பிரசாத், ‘திருமணம் செய்துகொள்ளுங்கள், உங்கள் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க நாங்கள் விரும்புகிறோம் என்று கூறினார்.
நாடாளுமன்ற தேர்தலில் ஆளும் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரளும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில், பீகார் முதல்-மந்திரியும், ஐக்கிய ஜனதா தளம் தலைவருமான நிதிஷ்குமார் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். இதற்காக அவர் காங்கிரஸ், ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ், திமுக என பல்வேறு கட்சி தலைவர்களை சந்தித்தார். இதன் பயனாக நேற்று எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டம் நேற்று பாட்னாவில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவது குறித்து முதற்கட்ட ஆலோசனை நடத்தப்பட்டது. எதிர்க்கட்சிகள் கூட்டத்திற்கு பின் எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது செய்தியாளர்கள் சந்திப்பில் பங்கேற்ற காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தியை திருமணம் செய்துகொள்ளும்படி ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவ் கோரிக்கை விடுத்த நிகழ்வு அரங்கேறியுள்ளது.
செய்தியாளர்கள் சந்திப்பின் போது ராகுல்காந்தியிடம் பேசிய லாலு பிரசாத், ‘திருமணம் செய்துகொள்ளுங்கள், உங்கள் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க நாங்கள் விரும்புகிறோம். உங்கள் அம்மா பேச்சை நீங்கள் கேட்பதில்லை என உங்கள் அம்மா என்னிடம் கூறினார். எங்கள் பேச்சை கேளுங்கள். திருமணத்தை உறுதி செய்யுங்கள்’ என்றார். செய்தியாளர்கள் சந்திப்பில் ராகுல்காந்தியிடம் திருமணம் செய்துகொள்ளுங்கள் என லாலு பிரசாத் கோரிக்கைவிடுத்த நிலையில் அங்கு சிரிப்பலை ஏற்பட்டது. இதனை தொடர்ந்து பேசிய ராகுல்காந்தி, ‘தற்போது நீங்களும் கூறிவிட்டீர்கள். அது விரைவில் நடக்கும்’ என்றார்.