பா.ஜ.க.வை வீழ்த்த வேண்டும் என்பதே இலக்கு: மு.க.ஸ்டாலின்

இந்தியாவின் ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டுமானால் பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு (2024) நடைபெற உள்ள தேர்தலில் மீண்டும் ஆட்சியை கைப்பற்ற பா.ஜனதா தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் பா.ஜனதாவை மீண்டும் ஆட்சிக்கு வர விடக்கூடாது என்று எதிர்க்கட்சி தலைவர்கள் ஆலோசித்து வருகிறார்கள். இந்த நிலையில் பீகார் முதல்-மந்திரியும், ஐக்கிய ஜனதாதளம் கட்சி தலைவருமான நிதிஷ்குமார் எதிர்க்கட்சிகளை ஓரணியில் ஒன்று திரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்து எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்து பேசினார். இதைத் தொடர்ந்து பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் நேற்று எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த கூட்டத்தில் மல்லிகார்ஜுன் கார்கே, ராகுல் காந்தி, மு.க.ஸ்டாலின், மம்தா பானர்ஜி, சரத் பவார், கெஜ்ரிவால், உத்தவ் தாக்கரே என மொத்தம் 16 எதிர்க்கட்சி தலைவர்கள் உட்பட 6 மாநில முதல் மந்திரிகள் கலந்து கொண்டனர். சுமார் 4 மணி நேரம் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் பங்கேற்ற தலைவர்கள் பா.ஜ.க. அரசை வீழ்த்த வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தனர். தொடர்ந்து மல்லிகார்ஜுன் கார்கே தலைமையில் சிம்லாவில் விரைவில் 2-வது கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆலோசனை கூட்டம் நிறைவுபெற்றதை அடுத்து, தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பாட்னாவில் இருந்து சென்னைக்கு புறப்பட்டார். சென்னை விமான நிலையத்திற்கு வந்திறங்கிய அவர், அங்கு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

பா.ஜ.க.வை வீழ்த்த வேண்டும் என்பதே இலக்கு. பா.ஜ.க. என்று சொல்வதால், தனிப்பட்ட ஒரு கட்சிக்கு எதிரான கூட்டமாக இதை யாரும் நினைக்க வேண்டாம். இந்தியாவின் ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டுமானால் பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதில் அனைத்து கட்சிகளும் மிகத் தெளிவாக இருக்கிறோம். பாட்னா கூட்டம் நம்பிக்கை தருகிறது, 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக நிச்சயம் தோற்கடிக்கப்படும்.

எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டத்தில் 7 முக்கிய கருத்துக்களை எடுத்து வைத்தேன். மதச்சார்பற்ற கட்சிகளின் ஒற்றுமைதான் தமிழ்நாட்டில் வெற்றி பெற உதவியது. இதேபோல தேசிய அளவில் ஒற்றுமை அமைய வேண்டும் என்று எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் பேசினேன். எந்த மாநிலத்தில் எந்த கட்சி பலமாக உள்ளதோ, அங்கு அந்தக் கட்சியின் தலைமையில் கூட்டணி அமைய வேண்டும் என்று கூறினேன். ஒடுக்கப்பட்ட, ஏழை எளிய மக்கள் காக்கப்பட வேண்டும் என்றால் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதில் உறுதியாக இருக்க வேண்டும் எனப் பேசினேன்.

தேர்தலுக்கு பிறகு கூட்டணி என்பது இருக்கக்கூடாது, குறைந்தபட்ச செயல் திட்டங்களை உருவாக்க குழு அமைக்க வேண்டும் என்று பேசினேன். பாட்னாவில் நடைபெற்ற மதச்சார்பற்ற கட்சிகளின் கூட்டம் நம்பிக்கையை தருகிறது. 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக நிச்சயம் தோற்கடிக்கப்படும். பாஜகவை வீழ்த்துவதை அனைத்து எதிர்க்கட்சிகளின் தலைவர்களும் ஒற்றை இலக்காக கொண்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.