பழனி முருகன் கோயில் சுற்றுலா தலம் அல்ல: எச்.ராஜா!

பழனி முருகன் கோயிலுக்குள் இந்துக்கள் அல்லாதவர்கள் பிரவேசிக்க அனுமதி இல்லை என்ற அறிவிப்பு பலகை மீண்டும் அகற்றப்பட்டதற்கு பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா கண்டனம் தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்கிறார்கள். இந்த நிலையில் பழனி பகுதியை சேர்ந்த சாகுல் என்பவர் பேருந்து நிலையத்தின் அருகே பழக்கடை நடத்தி வருகிறார். இவரது உறவினர்கள் சென்னையில் இருந்து வந்த நிலையில் அவர்களை அழைத்துக் கொண்டு பழனி மலைக் கோயில் அடிவாரத்தில் உள்ள ரோப் கார் நிலையத்திற்கு சென்றார். அப்போது அங்கு இந்து சமய அறநிலையத் துறை விதிகளின்படி இந்துக்கள் அல்லாதோர் மற்றும் மாற்று மதத்தினர் யாரும் கோயிலுக்கு செல்ல அனுமதி இல்லை என தெரிவித்துள்ளனர். இதனால் சாகுல் அதிர்ச்சி அடைந்தார். சாகுல் கோயிலுக்கு செல்ல முற்பட்டதை அறிந்த இந்து முன்னணி மற்றும் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினர் அந்த இடத்தில் குவிந்தனர். இதையடுத்து இந்து அமைப்பினரை காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர். மேலும் மலைக் கோயிலுக்கு செல்ல வந்த மாற்று மதத்தை சேர்ந்தவர்களை கோயிலுக்கு செல்ல அனுமதிக்க முடியாது என போலீஸார் தெரிவித்தனர். இதையடுத்து பழனி கோயில் நிர்வாகம் சார்பில் மாற்று மதத்தினர் யாரும் உள்ளே வரக் கூடாது என்ற அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்ததை அடுத்து அறிவிப்பு பலகை அங்கிருந்து அகற்றப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக டுவிட்டர் பக்கத்தில் பாஜக மூத்த தலைவர் எச் ராஜா கருத்தை பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:-

பழனி முருகன் கோயில் இந்துக்களின் வழிபாட்டு தலமாகும். இது ஒன்றும் சுற்றுலா தலம் அல்ல. கடந்த நான்கு நாட்களாக முஸ்லிம்கள் கோயிலுக்குள் செல்ல எத்தனிக்கிறார்கள். உடனே அறநிலையத்துறை இந்துக்கள் அல்லாதவர்கள் கோயிலுக்குள் பிரவேசிக்க அனுமதி இல்லை என்ற அறிவிப்பு பலகையைவைத்து, பின் மிரட்டலுக்கு பயந்து அகற்றியுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இது போன்ற அறிவிப்பு பலகை எல்லா கோவில்களிலும் வழக்கமான ஒன்றுதான். பழனியை போர்க்களமாக்க முயற்சிக்கும் சேகர் பாபுவின் இத்திட்டத்தை அனுமதிக்கமாட்டோம். இவ்வாறு எச்.ராஜா தெரிவித்துள்ளார்.