வாக்னர் கலகத்திற்கும் அமெரிக்காவிற்கும் எந்த பங்கும் இல்லை: ஜோ பைடன்!

வாக்னர் கூலிப்படையால் ரஷ்யாவில் ஆயுத கிளர்ச்சி ஏற்படும் அபாய சூழ்நிலை உருவானது பெலாரஸ் அதிபர் மத்தியஸ்தராக செயல்பட்டு ஆயுத கிளர்ச்சிக்கு தற்காலிக முற்றுப்புள்ளி வைத்தார். இந்நிலையில் வாக்னர் கலகத்திற்கும் அமெரிக்காவிற்கும் எந்த பங்கும் இல்லை என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார்.

ரஷ்யாவில் அந்நாட்டு தனியார் ராணுவமாகவும் கூலிப்படையாகவும் வாக்னர் அமைப்பு எனும் படை செயல்பட்டு வந்தது. சென்ற வார இறுதியில், அதன் தலைவர் எவ்ஜெனி பிரிகோசின் தலைமையில், அவரது படை ரஷ்ய அரசாங்கத்திற்கும், ராணுவத்திற்கும் எதிராக ஒரு கலகத்தை தொடங்கியது. இக்கலகம் பெரும் ராணுவ கிளர்ச்சியாக மாறலாம் என உலகம் எதிர்பார்த்திருந்த நிலையில் எந்த ரத்தக்களறியும், வன்முறையும் இல்லாமல் அது அடங்கி விட்டது. இக்கலகத்தின் பின்னணியில் மேற்கத்திய நாடுகளின் தூண்டுதலும், ஆதரவும் இருந்ததாக புதின் குற்றஞ்சாட்டியிருந்த நிலையில் அமெரிக்கா இதனை மறுத்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியிருப்பதாவது:-

அமெரிக்காவிற்கோ அல்லது நேட்டோ அமைப்பிற்கோ, ரஷ்யாவின் வாக்னர் கூலிப்படை அமைப்பின் கடந்த வார குறுகிய கால கிளர்ச்சியுடன் எந்த சம்பந்தமும் இல்லை. அங்கு நடந்த எழுச்சி, ரஷ்ய அரசாங்கத்திற்கெதிராகவும், அதிபருக்கு எதிராகவும் நீண்ட காலமாக நிலவி வரும் உள்நாட்டு அமைப்புமுறை சார்ந்த பிரச்சினை. அங்கு நிலவி வரும் சூழலை நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம். ஆனால் இது எவ்வாறு முடிவடையும் என்பதை தற்போதே அறுதியிட்டு கூற முடியாது. இவ்வாறு அவர் திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறார்.

ரஷ்யாவிற்கான முன்னாள் அமெரிக்க தூதர் மைக்கேல் ஃபவுல், “ரஷ்ய எதேச்சதிகார அமைப்பிற்கெதிரான சவால்களும், ஜனநாயக எழுச்சிகளும் தோன்றும் போதெல்லாம், உடனே அதன் பின்னணியில் அமெரிக்கா உள்ளதாக பழி கூறி அத்தகைய எழுச்சிகளுக்கு மக்களின் ஆதரவு கிடைக்காமல் பார்த்துக் கொள்வது ரஷ்ய அதிபரின் வழக்கம். மேலும், ரஷ்யாவின் சீர்குலைவின் பின்னணியில் தாங்கள் இருப்பதாக தவறாக சித்தரிக்கப்படுவதை அமெரிக்காவும், நேட்டோவும் ஒரு போதும் ஏற்றுக் கொள்ளாது” என கூறியுள்ளார்.