தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவிக்கு யாரை நியமித்தாலும் மகிழ்ச்சிதான் என தற்போதைய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக கே.எஸ். அழகிரி கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பொறுப்பேற்றார். வழக்கமாக 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாநில காங்கிரஸ் தலைவர் மாற்றப்படுவது வழக்கம். ஆனால், கே.எஸ். அழகிரி 4 ஆண்டுகளுக்கும் மேலாக தலைவராக நீடித்து வருகிறார். இந்நிலையில் புதிய தலைவரைத் தேர்வு செய்ய தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்கள் தலைமைக்கு அழுத்தம் கொடுத்து வருவதாகக் கூறப்படுகிறது. இதனால் காங்கிரஸ் தலைமையும் தமிழ்நாட்டின் அடுத்த காங்கிரஸ் தலைவரைத் தேர்வு செய்ய முனைப்பு காட்டியுள்ளது. அதன்படி தலைமை அழைப்பிற்கேற்ப கே.எஸ். அழகிரி நேற்று டெல்லி சென்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்துப் பேசியுள்ளார். அடுத்த தலைவர் குறித்து அவரிடம் கருத்து கேட்கப்பட்டதாகத் தெரிகிறது. ஜோதிமணி எம்.பி., செல்லக்குமார் எம்.பி., கார்த்தி சிதம்பரம், முன்னாள் எம்.பி. விசுவநாதன் ஆகியோரது பெயர்கள் காங்கிரஸ் வட்டாரத்தில் கூறப்படுகின்றன.
இந்நிலையில் டெல்லியில் காங்கிரஸ் தலைமையகத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ். அழகிரி கூறியதாவது:-
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவிக்கு யாரை நியமித்தாலும் மகிழ்ச்சிதான். நான் பதவி கேட்டு தலைவர்களை சந்தித்ததில்லை. அதுபோல பதவியை தக்கவைக்கவும் யாரையும் சந்திக்கவில்லை. எனக்கான பணி வழங்கப்படும்போது அதனை சரியாக செய்கிறேன். எனவே, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக நீடித்தாலும் மகிழ்ச்சி, வேறு ஒருவரை நியமித்தாலும் மகிழ்ச்சிதான். பதவியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் கட்சிக்கு பணியாற்றுவேன். இவ்வாறு அவர் பேசினார்.