செந்தில் பாலாஜி வழக்கில் வாதங்கள் நிறைவு: தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆள்கொணர்வு வழக்கின் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.

அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது, வேலைவாய்ப்புப் பெற்றுத் தர பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டதாக செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை ஜூன் 14-ஆம் தேதி கைது செய்த நிலையில், நெஞ்சு வலி காரணமாக மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் பரிந்துரை செய்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜியின் மனைவி தாக்கல் செய்த ஆள்கொணர்வு மனுவை விசாரித்த நீதிபதிகள், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதித்து வழக்கை ஒத்திவைத்தனர். சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராகவும் செந்தில் பாலாஜியை காவலில் எடுக்க அனுமதி கோரியும் அமலாக்கத்துறை தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை கடந்த வாரம் விசாரித்த உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்ற உத்தரவில் தலையிட விரும்பவில்லை எனத் தெரிவித்து, உயர்நீதிமன்ற உத்தரவுக்கு பிறகு விசாரிப்பதாக கூறி வழக்கை ஒத்திவைத்தது.

இந்நிலையில், செந்தில் பாலாஜி மனைவி தாக்கல் செய்த ஆள்கொணர்வு மனு நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்ரவர்த்தி அமர்வு முன்னிலையில் கடந்த வாரம் மீண்டும் விசாரணைக்கு வந்தது. இதற்கிடையே, செந்தில் பாலாஜி மருத்துவமனையில் உள்ள காலத்தை காவலாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்று தனி மனுவும் அமலாக்கத்துறை தாக்கல் செய்தது. ஆள்கொணர்வு மனுவை விசாரணைக்கு உகந்ததல்ல என்று அமலாக்கத்துறையும், கைது செய்யப்பட்டதற்கான காரணத்தை தெரிவிக்காததால் ஆள்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்தது என செந்தில் பாலாஜி தரப்பும் வாதிட்ட நிலையில் வழக்கின் விசாரணை ஜூன் 27-க்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், செந்தில் பாலாஜி தரப்பில் இன்று ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தஹி, மருத்துவமனையில் சிகிச்சை பெறும் காலத்தை நீதிமன்ற காவல் காலமாக கருதக்கூடாது எனக் கோர முடியாது. அதற்கு எந்த சட்டத்திலும் வழிவகை செய்யப்படவில்லை. 15 நாள்கள் முடிந்தது என வாதிட்டார்.

அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியும் செந்தில் பாலாஜி விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை எனத் தெரிவித்தார்.

சுமார் 6 மணிநேரமாக விசாரணை நடைபெற்ற நிலையில், இரு தரப்பினருக்கும் நாளைக்குள் எழுத்துப்பூர்வ பதிலை தாக்கல் செய்ய அவகாசம் அளித்து வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.