தக்காளியை பதுக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் பெரியகருப்பன் எச்சரித்துள்ளார்.
அன்றாட சமையலில் இன்றியமையாத காய்கறிகளில் ஒன்றான தக்காளி விலை தாறுமாறாக எகிறி உள்ளது. ஒரு கிலோ தக்காளி ரூ.100-க்கு விற்பனையாகி பொதுமக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. தமிழ்நாட்டில் கோடை வெயில் கடுமையாக இருந்ததால் தக்காளி சாகுபடி பாதிக்கப்பட்டது. அண்டை மாநிலங்களில் பெய்த மழையால் அங்கும் தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டதால் வரத்து வெகுவாக குறைந்துள்ளது. இதுவே தக்காளி விலை உச்சம் தொடுவதற்கு காரணம் என்று வியாபாரிகள் கூறுகிறார்கள். தக்காளி விலை வரும் நாட்களிலும் ஏறுமுகத்தில் இருக்கும் என்று கருதப்படுகிறது. எனவே தக்காளியை பதுக்கி விற்றால் கூடுதல் லாபம் பார்க்கலாம் என்று ஒரு சில வியாபாரிகள் மனக்கணக்கு போட்டு வருகின்றனர். இதனால் டன் கணக்கில் தக்காளி பதுக்கப்பட்டு வருவதாக பரபரப்பு குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
அதே நேரத்தில், வெளிச்சந்தையில் ஒரு காய்கறி விலை கடுமையாக உயரும்போது தமிழ்நாடு அரசின் கூட்டுறவுத்துறையின் கீழ் இயங்கும் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் அந்த காய்கறி கொள்முதல் விலைக்கு விற்பனை செய்யப்படும். அதன்படி, பண்ணை பசுமை கடைகளில் கொள்முதல் விலைக்கு தக்காளி விற்பனை தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் ந.சுப்பையன், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் கணினி மயமாக்கல் சிறப்பு பணி அதிகாரி சிவன் அருள், கூடுதல் பதிவாளர்கள் வில்வசேகரன், சுப்பிரமணியன், குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்த கூட்டம் முடிந்தவுடன் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
இந்த ஆண்டு கோடையில் கடும் வெப்பம் நிலவியதால் விவசாயிகள் தக்காளி பயிரிடுவது கணிசமாக குறைந்ததாலும், அண்டை மாநிலங்களில் இருந்து தக்காளி வரத்து குறைந்ததாலும் கடந்த வாரம் முதல் தக்காளி விலை அதிகரித்துள்ளது. தோராயமாக நாள் ஒன்றுக்கு சென்னை கோயம்பேடு மார்கெட்டுக்கு 800 டன் வரையில் வரக்கூடிய தக்காளி வரத்து தற்போது 300 டன் என்ற அளவில் குறைந்துள்ளது. இதனால் வெளிச்சந்தைகளில் ஒரு கிலோ தக்காளியின் விலை ரூ.90 முதல் ரூ.100 வரை விற்கப்படுகிறது. இதனால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த விலை ஏற்றத்தை கட்டுப்படுத்தும் வகையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின் படி, கூட்டுறவுத்துறையின் மூலம் சென்னையில் செயல்பட்டு வரும் 27 பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மற்றும் 2 நகரும் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள், கோவையில் செயல்பட்டு வரும் 10 பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள், திருச்சியில் செயல்பட்டு வரும் 13 பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மற்றும் 1 நகரும் பண்ணை பசுமை நுகர்வோர் கடை, மதுரையில் செயல்பட்டு வரும் 4 பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள். மேலும், தூத்துக்குடி, திருவண்ணாமலை, நெல்லை, தஞ்சை, திருப்பூர், சேலம், ஈரோடு, வேலூர் ஆகிய மாவட்டங்களில் தலா 1 வீதம் செயல்பட்டு வரும் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் என 62 பண்ணை பசுமை நுகர்வோர் பசுமை கடைகள், 3 நகரும் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் கொள்முதல் விலைக்கே தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
பசுமை நுகர்வோர் கடைகளில் குறைந்தபட்சமாக தக்காளி விலை கிலோ ஒன்றுக்கு ரூ.68 முதல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த விலையானது வெளிச்சந்தையுடன் ஒப்பிடுகையில் ரூ.28 முதல் ரூ.32 வரை குறைவானதாகும். மேலும், பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் ரூ.60 முதல் விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்த விலையேற்றம் தற்காலிகமானதே. விரைவில் தக்காளி விலையேற்றம் கட்டுப்படுத்தப்படும். எனவே, பொதுமக்கள் அனைவரும் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் தக்காளி மற்றும் காய்கறிகளை வாங்கி பயன் பெற கேட்டுக்கொள்கிறேன். விலையேற்றத்தை கருத்தில் கொண்டு தக்காளியை பதுக்கும் நடவடிக்கையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் கூறியுள்ளார்.