அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநலன் வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்தின் முதன்மை அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை.
சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் தமிழ்நாடு அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இதய அடைப்பு இருந்ததால் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில் மருத்துவமனையில் தொடர்ந்து அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அமலாக்கத்துறையால் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதால் அவரது துறைகள் அமைச்சர்கள் முத்துசாமி, தங்கம் தென்னரசுக்கு பிரித்து கொடுக்கப்பட்டன. மேலும் செந்தில் பாலாஜி, இலாகா இல்லாத அமைச்சராக தொடர்ந்து நீடிப்பார் எனவும் தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டது. ஆனால் இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிக்க ஆளுநர் தரப்பில் அதிருப்தி தெரிவிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. இது தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், 2 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றால்தான் அமைச்சர் பதவியை இழக்க முடியும் என குறிப்பிட்டிருந்தனர்.
இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த வழக்கறிஞர் சண்முகசுந்தரம், சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் ஒரு மனுவைத் தாக்கல் செய்துள்ளார். அதில், 2021-ல் கரூர் சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு வென்றவர் செந்தில் பாலாஜி. மின்சாரம், கலால் ஆயத்தீர்வை அமைச்சராகவும் இருந்தார். தற்போது முந்தைய அதிமுக ஆட்சிக் காலத்தில் அமைச்சராக இருந்த போது பண மோசடி செய்தது, சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளார். இதனால் அவரது அமைச்சரவை இலாகாக்கள் 2 அமைச்சர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும் இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி பதவியில் நீடிப்பார் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இது அரசியல் சாசனத்துக்கு எதிரானது. ஆகையால் செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என கோரி உள்ளார்.
இந்த மனுவை சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா பெஞ்ச் இன்று விசாரித்தது. இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்தின் முதன்மை அமர்வுக்கு மாற்றி நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதே கோரிக்கையுடனான மனு ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றத்தின் முதன்மை அமர்வில் நிலுவையில் இருப்பதால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.