பொது சிவில் சட்டத்தை மக்கள் மீது திணிக்க முடியாது: ப.சிதம்பரம்!

கொள்கையால் வழிநடத்தப்படும் பெரும்பான்மை அரசு, பொது சிவில் சட்டத்தை மக்கள் மீது திணிக்க முடியாது. அது மக்களிடம் பிரிவினையை அதிகப்படுத்தும் என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:-

பொது சிவில் சட்டத்தை வலியுறுத்திப் பேசும்போது பிரதமர் மோடி நாட்டை ஒரு குடும்பத்துடன் ஒப்பிட்டு பேசியிருக்கிறார். மேலோட்டமாக பார்க்கும்போது இந்த ஒப்பீடு சரியாகவேத் தோன்றும். ஆனால், யதார்த்தம் வித்தியாசமானது.

குடும்பம் என்பது ரத்த உறவுகளால் பிணைக்கப்பட்டுள்ளது. ஒரு தேசம் அரசியல் ஆவணமான அரசியலமைப்புச் சட்டத்தால் இணைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு குடும்பத்துக்குள்ளும் வேற்றுமைகள் உண்டு. நமது அரசியலமைப்பு நாட்டு மக்களுக்கிடையே உள்ள வேற்றுமை மற்றும் பன்முகத்தன்மையை அங்கீகரிக்கிறது.

பொது சிவில் சட்டம் என்பது ஓர் ஆசை. கொள்கையால் இயக்கப்படும் ஒரு பெரும்பான்மை அரசு அதனை மக்கள் மீது திணிக்க முடியாது. பொது சிவில் சட்டத்தை ஒரு பயிற்சி என்று பிரதமர் கூறுகிறார். அவர், தற்போது பொது சிவில் சட்டம் என்பது சாத்தியமில்லை என்ற கடைசி சட்ட ஆணையத்தின் அறிக்கையை வாசிக்க வேண்டும்.

பாஜகவின் சொல்லாலும் செயலாலும் நாடு பிளவுபட்டுள்ளது. பொது சிவில் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும்போது, அந்தப் பிரிவு மேலும் அதிகாமாகும். நாட்டில் நிலவும் பணவீக்கம், வேலைவாய்ப்பின்மை, வெறுப்புக் குற்றங்கள்,பாகுபாடு காட்டுதல் மற்றும் மாநிலங்களின் அதிகாரங்களை பறித்தல் போன்றவற்றில் இருந்து நாட்டின் கவனத்தை திசை திருப்புவதற்காகவே பிரதமர் பொது சிவில் சட்டத்தினை வலியுறுத்தி வருகிறார். மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். நல்லாட்சி தருவதில் தோல்வியடைந்துவிட்ட பாஜக, வாக்காளர்களை துண்டாடவும், அடுத்த தேர்தலில் வெற்றி பெறுவதற்காகவுமே பொது சிவில் சட்டத்தினை தற்போது கையில் எடுத்துள்ளது. இவ்வாறு ப.சிதம்பரம் கூறியுள்ளார்.