கொரோனா காலத்தில் பணிபுரிந்த போக்குவரத்து ஊழியர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை!

கொரோனா காலக்கட்டத்தில் பணிபுரிந்த போக்குவரத்து ஊழியர்களை அங்கீகரிக்கும் வகையில் அவர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகையாக ரூ.17.15 கோடி வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சீனாவில் பரவிய கொரோனா பெருந்தொற்று இந்தியாவை கடந்த 2020-ம் ஆண்டு தாக்கியது. தமிழகத்திலும் இதன் பாதிப்பு பயங்கரமாக இருந்தது. நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் வைரஸ் காய்ச்சலால் செத்து மடிந்தனர். மருத்துவமனைகளில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் இல்லாமலும், படுக்கைகள் இல்லாமலும் பலரும் மருத்துவமனை வாசலிலேயே உயிரிழந்த கொடுமையும் அரங்கேறியது. அந்த சமயத்தில், வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. அந்த இக்கட்டான சூழலிலும் கூட, மக்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்வதற்காக காவல்துறை, போக்குவரத்துறை, மருத்துவத்துறை, ஊடகத்துறைகளைச் சேர்ந்தவர்கள் தங்கள் உயிரையும் துச்சமாக எண்ணி பணியாற்றினார்கள்.

இந்நிலையில், கொரோனா காலக்கட்டத்தில் பணியாற்றிய போக்குவரத்துத் துறை ஊழியர்களை அங்கீகரிக்கும் விதமாக தமிழக அரசு தற்போது அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, அந்த ஊழியர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவித்துள்ள தமிழக அரசு, இதற்காக ரூ. 17.15 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. அதேபோல, 14வது ஊதிய ஒப்பந்தத்தின்படி, ஊதிய நிலுவைத் தொகையாக ரூ. 171.05 கோடியும் போக்குவரத்து ஊழியர்களுக்கு வழங்கவும் உத்தரவிட்டிருப்பதாக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.