சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் மீது திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட நபர் சுட்டு கொல்லப்பட்டுள்ளார். அதேபோல இந்த தாக்குதலில் பாதுகாப்புப் படை வீரர் ஒருவரும் உயிரிழந்துள்ளார்.
ஜெட்டா நகரம் சவுதி அரேபியாவின் இரண்டாவது மிகப்பெரிய நகரமாகும். மக்கா, மதினா எனப்படும் புனித தலங்களுக்கான நுழைவு வாயிலும் இதுதான். செங்கடலின் கரையோரத்தில் அமைந்திருக்கும் இந்நகரம், சவுதியின் மிகப்பெரிய துறைமுக நகரங்களில் ஒன்றாகும். இங்கு அமெரிக்க தூதரகம் ஒன்றும் அமைந்திருக்கிறது. இந்நிலையில் இந்த தூதரகத்தின் மீது மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தியிருக்கிறார். காரில் வந்திறங்கிய அவர், தூதரகத்தின் வாசலில் கண்ணில் பட்டதையெல்லாம் சரமாரியாக சுட்டுத்தள்ள தொடங்கியுள்ளார். திடீரென துப்பாக்கிச்சூடு நடந்ததால் தூதரகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த வீரர் ஒருவர் இதனை எதிர்த்து துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டார். ஆனால் எதிர்பாராத விதமான வீரர் உயிரிழந்துவிட்டார். இந்த சம்பவத்தை அறிந்த சவுதி பாதுகாப்பு படையினர் உடனடியாக மர்ம நபரை சுற்றி வளைத்து தாக்கினர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனையடுத்து தூதரகம் உடனடியாக மூடப்பட்டது. இதில் தூதரகத்தின் உள்ளே இருந்த மக்கள், அதிகாரிகள் என யாரும் காயமடையவில்லை. மேலும் இந்த விவகாரம் குறித்து சவுதி பாதுகாப்புப்படை விசாரணையை முடுக்கிவிட்டுள்ளது. தற்போது வரை இந்த தாக்குதலுக்கான நோக்கம் தெரியவில்லை என சவுதி கூறியுள்ளது.
மர்ம நபர் தாக்கியதில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவர் நேபாளத்தை சேர்ந்தவராவார்.