முதல்-மந்திரி பதவியில் இருந்து விலக மாட்டேன்: பிரேன் சிங் அறிவிப்பு!

நெருக்கடியான இந்த தருணத்தில் முதல்-மந்திரி பதவியில் இருந்து விலகப்போவதில்லை என்று மணிப்பூர் முதல்-மந்திரி பிரேன் சிங் அறிவித்துள்ளார்.

வட கிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் முதல்-மந்திரி பிரேன் சிங் தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடந்து வந்தது. அங்கு பெரும்பான்மையினராக உள்ள மெய்தி சமூகத்தினர் தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்த்து கல்வி, வேலை வாய்ப்பில் சலுகைகள் வழங்க வேண்டும் என்று கோருகின்றனர். ஆனால் சிறுபான்மையினராக உள்ள பழங்குடி இனத்தைச் சேர்ந்த குகி, நாகா சமூகங்களைச் சேர்ந்தவர்கள், மெய்தி இன மக்களின் கோரிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இதில் இரு தரப்பிலும் கடந்த மே மாதம் 3-ந் தேதி தொடங்கிய மோதல், தொடர்கதையாய் நீண்டு வருகிறது. நேற்று முன்தினம்கூட அங்கு இம்பால் மேற்கில் ஹராதல் பகுதியில் 2 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்த ஒருவர் நேற்று மரணம் அடைந்தார். இதுவரை கலவரங்களில் அங்கு சுமார் 120 பேர் கொல்லப்பட்டுள்ளனர். கலவரங்களால் பாதிப்புக்குள்ளான 50 ஆயிரம் பேர், முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த கலவரங்களுக்கு முதல்-மந்திரி பிரேன்சிங்தான் பொறுப்பு என்று 10 எதிர்க்கட்சிகள தெரிவித்தன. இது தொடர்பாக அந்தக் கட்சிகள் பிரதமர் அலுவலகத்தில் கடந்த 20-ந் தேதி மனு அளித்தனர். மணிப்பூருக்கு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா சென்று கலவரப்பகுதிகளைப் பார்வையிட்டார். அவர் அனைத்துக்கட்சி கூட்டம் ஒன்றை சமீபத்தில் நடத்தினார். அமெரிக்கா, எகிப்து பயணங்களை முடித்துக்கொண்டு கடந்த 26-ந் தேதி டெல்லி திரும்பிய பிரதமர் மோடி. மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட மூத்த மந்திரிகளை அழைத்து ஆலோசனை நடத்தினார்.

மணிப்பூரில் அமைதி திரும்பாத நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மணிப்பூருக்கு 2 நாட்கள் பயணம் மேற்கொண்டு, பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்துப்பேசினார். அவர் மாநில கவர்னர் அனுசுயா உய்கியையும் நேற்று சந்தித்து, மாநிலத்தில் அமைதியை மீட்டெடுக்குமாறு வலியுறுத்தினர். கலவரங்களை முடிவுக்கு கொண்டு வர முதல்-மந்திரி பிரேன் சிங் தவறி விட்டார் என்ற குற்றச்சாட்டு அங்கு எழுந்துள்ளது. இந்த சூழ்நிலையில் முதல்-மந்திரி பிரேன் சிங் நேற்று பதவி விலகப்போவதாக தகவல்கள் வெளியாகின. அவர் கவர்னரைச் சந்திக்கப்போவதாகவும் கூறப்பட்டது. இதனால் மாநில அரசியல் களம் பரபரப்பானது. ஆனால் அவர் பதவி விலக எதிர்ப்பு தெரிவித்து மணிப்பூர் தலைமைச்செயலகம் மற்றும் கவர்னர் மாளிகை அருகே பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தப் போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது. முதல்-மந்திரி பிரேன் சிங், கவர்னர் அனுசுயா உய்கியை சந்திப்பதற்கு கவர்னர் மாளிகைக்கு செல்ல விடாமல் அவரது ஆதரவாளர்கள் தடுத்து விட்டனர் என தகவல்கள் கூறுகின்றன. இதையடுத்து முதல்-மந்திரி பிரேன் சிங் பதவி விலக மாட்டேன் என அறிவித்தார். இதுபற்றி அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், ” இந்த நெருக்கடியான தருணத்தில், நான் முதல்-மந்திரி பதவியில் இருந்து விலகப்போவதில்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.