தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்துவிட முடியாது: டிகே சிவகுமார்

கர்நாடகாவில் பருவமழை பற்றாக்குறையால் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்து விட முடியாது என கர்நாடக துணை முதல்வரும், நீர்வளத்துறை அமைச்சருமான டிகே சிவகுமார் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2015ஆம் ஆண்டு மேகதாது அணை கட்டுவதற்கான திட்ட அறிக்கையை கர்நாடக அரசு மத்திய அரசிடம் தாக்கல் செய்தது. இந்த அறிக்கைக்கு, 2018ஆம் ஆண்டு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இந்த அனுமதியை திரும்பப் பெற வேண்டும் என தமிழ்நாடு அரசு பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியது. மேலும், தமிழ்நாட்டின் ஒப்புதல் இல்லாமல் கர்நாடகா அரசு மேகதாது அணை கட்ட முடியாது என காவிரி மேலாண்மை வாரியம் விளக்கம் அளித்தது. மேகதாதுவில் அணை கட்டி 66 டிஎம்சி தண்ணீரை தேக்கினால் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் வராது, தமிழ்நாடு பாலைவனமாக மாறிவிடும் என தமிழ்நாட்டைச் சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது.

இந்நிலையில், கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்து, காங்கிரஸ் மூத்த தலைவர் டிகே சிவக்குமார் நீர்வளத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற நிலையில், மேகதாது அணை விவகாரம் மீண்டும் தமிழ்நாடு – கர்நாடக அரசியலில் சர்ச்சையாக வெடித்து வருகிறது.

இந்நிலையில் காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதால் தமிழ்நாட்டிற்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என முறையிட்டுள்ளது. இதுகுறித்து மத்திய ஜல் சக்தி அமைச்சரிடம், கர்நாடக துணை முதலமைச்சரும், நீர் மேலாண்மை அமைச்சருமான டி.கே.சிவக்குமார் கடிதம் அளித்துள்ளார். அணை கட்டுவது தொடர்பாக தயாரிக்கப்பட்டுள்ள விரிவான திட்ட அறிக்கைக்கு அனுமதி அளிக்க வேண்டும் என டிகே சிவக்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே சிவக்குமார், தமிழ்நாட்டிற்கு காவிரி நீரை திறந்துவிடும் சூழல் தற்போது இல்லை, காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டாலும், தண்ணீரை திறந்து விடுவது கடினம் என்று தெரிவித்துள்ளார். மேலும் “பருவமழை தாமதமானதால் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. எங்கள் மாநிலத்தின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யவே தண்ணீர் போதவில்லை. காவிரி மேலாண்மை ஆணையம் தண்ணீர் திறக்க உத்தரவிட்டுள்ளது. ஆனால் கர்நாடகாவில் போதிய நீர் இருப்பு இல்லாததால் தமிழ்நாட்டிற்கு தற்போது காவிரி நீரை திறந்துவிடும் சூழல் இல்லை.” என்று தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், வரும் ஜூலை 8 அல்லது 9ஆம் தேதி, கர்நாடகாவில் அனைத்து மாநில நீர்ப்பாசனத்துறை அதிகாரிகள் மாநாட்டை கே.ஆர்.எஸ் அணை பகுதியில் நடத்த முடிவு செய்துள்ளதாகவும், அங்கு மாநாடு நடத்தினால் தான் அந்த அணையில் உள்ள உண்மையான நீர் இருப்பை மத்திய மற்றும் தமிழ்நாட்டின் அதிகாரிகள் நேரில் பார்க்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய டி.கே.சிவக்குமார், “மேகதாது திட்டம் எந்த அளவுக்கு கால தாமதம் ஆகிறதோ, அந்த அளவுக்கு திட்ட மதிப்பீடு அதிகரிக்கும். இதனால் அரசுக்கு நஷ்டம் ஏற்படும். ஆனால் தமிழ்நாட்டினர் மேகதாது திட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். மேகதாது திட்டத்தால் தமிழ்நாட்டிற்கு பாதிப்பு இல்லை. இதுகுறித்து தமிழ்நாடு அரசுக்கு விளக்கம் அளிக்க முடிவு செய்துள்ளோம்.” என்று தெரிவித்துள்ளார்.