சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் குழந்தைக்கு தவறுதலாக ஊசிபோட்டதாக புகார் குறித்து விசாரிக்க மூவர் குழு அமைக்கப்பட்டுள்ளது என்று மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 1½ வயது குழந்தைக்கு கையில் டிரிப் ஏற்றியதில் தவறுதலாக ஊசி போட்டதால் அந்த குழந்தையின் கையை அகற்ற வேண்டிய நிலை ஏற்பட்டு எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
அந்த குழந்தை குறை பிரசவத்தில் பிறந்ததால் உடலில் பல பிரச்சினைகள் இருந்துள்ளது. இதுபற்றி டீன் ஏற்கனவே பெற்றோரிடம் விளக்கமாக கூறி இருக்கிறார். தொடர்ந்து அந்த குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. டாக்டர்களோ, செவிலியர்களோ குழந்தைகளை காப்பாற்றத்தான் போராடுவார்கள். தவறுதலாக ஊசி போட வாய்ப்பு குறைவு. ஒருவேளை கவனக்குறைவாக இருந்தார்களா என்று விசாரிப்பதற்காக 3 மருத்துவர்களை கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு விசாரித்து அறிக்கை தரும். கவனக் குறைவு ஏற்பட்டு இருந்தால் அதற்கான பொறுப்பை அவர்கள் தான் ஏற்க வேண்டும். அந்த குழந்தைக்கு தேவையான சிகிச்சைகளை மருத்துவர்கள் செய்து வருகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிலையில் குழந்தைக்கு மயக்க மருந்து கொடுக்கப்பட்டு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. 2 மணி நேரம் அறுவை சிகிச்சையில் குழந்தையின் அழுகிய கை அகற்றப்பட்டது. இந்நிலையில், அறுவை சிகிச்சை நிறைவு பெற்ற நிலையில் குழந்தை தொடர் மருத்துவ கண்காணிப்பில் இருப்பதாகவும், குழந்தை தற்போது நலமுடன் இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.