ஓபிஎஸ்சுக்கும் அதிமுகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை: எடப்பாடி பழனிசாமி

அதிமுகவுக்கும், ஓபிஎஸ்சுக்கும் எந்த தொடர்பும் இல்லை. நாடாளுமன்றத் தேர்தலில் ஓபிஎஸ்-பாஜ கூட்டணி குறித்து சம்பந்தப்பட்டவர்கள் தான் பதில் சொல்ல வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

சேலம் மாவட்டம், ஓமலூரில் உள்ள அதிமுக அலுவலகத்தில், புதிய உறுப்பினர் சேர்க்கை, பூத் கமிட்டி அமைத்தல் குறித்த ஆலோசனை கூட்டம், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று நடந்தது. பின்னர் எடப்பாடி பழனிசாமி அளித்த பேட்டியில் கூறியதாவது:-

மேகதாது விவகாரத்தில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கர்நாடக நீர்ப்பாசனத்துறை அமைச்சர் சிவக்குமார் தெரிவித்த கருத்து கண்டனத்துக்குரியது. காவிரி மேலாண்மை வாரியம், முறைப்படுத்தும் குழு எடுக்கும் முடிவின்படியும், உச்சநீதிமன்ற தீர்ப்பின் படியும், தமிழகத்திற்கு வழங்க வேண்டிய தண்ணீரை, கர்நாடகா அரசு வழங்க வேண்டும். மேகதாது அணை கட்டுவது என்பது ஒருபோதும் நடக்காது. உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி விட்டது. அதன்படி, கர்நாடக அரசு நடந்து கொள்ளவேண்டும். மக்களின் நன்மைக்காக ஆளும் கட்சியின் தவறுகளை எதிர்க்கட்சி எடுத்துக்காட்ட வேண்டும். அதன்படி தான் அதிமுக எதிர்க்கட்சியாக செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் கள்ளச்சாராயத்தை ஒழிப்பதற்கு தீவிர பிரசாரம் மேற்கொள்ளவேண்டும். குடிப்பவர்களை அரசு மீட்டெடுக்க வேண்டும். படிப்படியாக தான் மதுவிலக்கை அமல்படுத்த முடியும்.

ஓபிஎஸ் பாஜவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து, நீங்கள் சம்பந்தப்பட்டவர்களிடம் தான் கேட்க வேண்டும். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ்சுக்கும், எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. அதிமுக என்ற பயிர் செழித்து வளர்ந்து, மக்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. அதிமுக குறித்து வழக்கு நடைபெற்று வந்த போதெல்லாம், தொண்டர்கள் எங்களுடன் இருக்கிறார்கள் என்று ஓபிஎஸ் பேசி வந்தார். ஆனால் தொண்டர்கள் அனைவரும் ஒரே எண்ணத்தில், அதிமுகவுடன் இருக்கிறார்கள். அதிமுகவில் 2 கோடி தொண்டர்களை சேர்க்க வேண்டும் என்ற இலக்கை, விரைவில் அடைந்து விடுவோம். அதிமுக வலிமையுடன் இருக்கிறது. ஆளுங்கட்சிக்கு பி-டீமாக செயல்பட்டு வந்தவர்கள், பொதுக்குழு முடிவின்படி, கட்சியிலிருந்து நீக்கப்பட்டு விட்டனர். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.