வேங்கைவயல் விவகாரம்: 8 பேருக்கு இன்று ரத்த மாதிரி சேகரிப்பு!

வேங்கைவயல் விவகாரத்தில் டி.என்.ஏ பரிசோதனைக்கு வர மறுத்த 8 பேருக்கும் கண்டிப்பாக டிஎன்ஏ பரிசோதனை எடுக்க வேண்டும் என்று புதுக்கோட்டை மாவட்ட வன்கொடுமை தடுப்புச் சட்ட நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் இன்று அவர்கள் 8 பேருக்கும் டி.என்.ஏ பரிசோதனைக்காக ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன.

புதுக்கோட்டை அருகே வேங்கைவயல் ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் உள்ள நீர்த்தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவுகள் கலக்கப்பட்ட விவகாரத்தைத் தொடர்ந்து காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தது. பின்னர் சிபிசிஐடிக்கு இந்த வழக்கை மாற்றி விசாரிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து வழக்கு விசாரணையை ஏற்ற சிபிசிஐடி, வேங்கைவயல், இறையூர், கீழ முத்துக்காடு ஆகிய கிராமங்களில் உள்ள பொதுமக்களிடம் தொடர் விசாரணை மேற்கொண்டு சந்தேகத்திற்குரிய நபர்கள் சிலரை அடையாளம் கண்டனர். இதற்கிடையே குடிநீர் தொட்டியில் கலக்கப்பட்டது 2 ஆண்கள், ஒரு பெண்ணின் மனித கழிவு என்பது டிஎன்ஏ பகுப்பாய்வு மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, 11 நபர்கள் மீது டிஎன்ஏ பரிசோதனை செய்ய அனுமதி பெற்றனர். ஆனால் அவர்களில் மூன்று பேர் மட்டுமே புதுக்கோட்டை அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் டிஎன்ஏ பரிசோதனை செய்து கொண்டனர். பயிற்சி காவலர் முரளி ராஜா, இறையூர் மற்றும் கீழ முத்துக்காட்டைச் சேர்ந்த இரண்டு நபர்கள் என மூவர் மட்டுமே டிஎன்ஏ பரிசோதனைக்கு ஒத்துழைத்தனர். மீதமுள்ள நபர்கள் சம்மன் அனுப்பியும் டிஎன்ஏ பரிசோதனைக்கு வர மறுத்தனர். நாங்கள் ஏற்கெனவே பாதிக்கப்பட்டு இருக்கிறோம், எங்களை எதற்கு பரிசோதனை செய்ய வேண்டுமென கூறுகிறீர்கள் என்று கேட்டு மதுரை நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர். மதுரை நீதிமன்றம், புதுக்கோட்டை நீதிமன்றம் இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. அதனைத்தொடர்ந்து புதுக்கோட்டை எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குகளை விசாரணை செய்யும் சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த 30ஆம் தேதி நீதிபதி ஜெயந்தி, டிஎன்ஏ பரிசோதனை செய்ய மறுத்தவர்களிடம் விசாரணை மேற்கொண்டார்.

பிறகு இந்த வழக்கு ஜூலை 1ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அப்போது ஆஜரான 8 பேரும், டி.என்.ஏ பரிசோதனை மேற்கொள்வதில் தங்களுக்கு சம்மதம் இல்லை என தெரிவித்தனர். மேலும், வழக்கறிஞர் மூலமாக எழுத்துப்பூர்வமாக மறுப்பு தெரிவித்து மனு தாக்கல் செய்தனர். அறிவியல் பூர்வமாக சாட்சிகளை நிரூபிக்க வேண்டியுள்ளதால் டி.என்.ஏ. பரிசோதனை அவசியம் என்று சி.பி.சி.ஐ.டி டிஎஸ்பி தெரிவித்தார். இதையடுத்து, நீதிபதி வழக்கு விசாரணையை 4-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். அதனைத் தொடர்ந்து நேற்று மதியம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது 8 நபர்களும் ஆஜராகினர். அவர்களை இன்று (5-ம் தேதி) டிஎன்ஏ பரிசோதனை கட்டாயம் செய்து கொள்ள வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி, சுபா, முத்துராமன், கிருஷ்ணன், கண்ணதாசன், ஜீவானந்தம், கணேசன், இளவரசி, ஜானகி ஆகிய 8 பேரும் இன்று டிஎன்ஏ பரிசோதனைக்கு ஆஜராகினர். சிபிசிஐடி போலீசாரும் அங்கு வருகை தந்தனர். எட்டு பேருக்கும் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டிஎன்.ஏ பரிசோதனைக்கு முன்பாக உடற்தகுதி பரிசோதனையும் நடத்தப்பட்டது. தொடர்ந்து, டிஎன்ஏ பரிசோதனைக்காக ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.