குழந்தையின் கை அகற்றப்பட்டதில் மருத்துவக்குழுவின் அறிக்கையில் திருப்தி இல்லை: குழந்தையின் தாய்

ஒன்றரை வயது குழந்தையின் கை அகற்றப்பட்ட விவகாரத்தில் மருத்துவக் குழுவின் விசாரணை அறிக்கையில் திருப்தி இல்லை என குழந்தையின் தாய் அஜிஷா தெரிவித்துள்ளார்.

ஒன்றரை வயது குழந்தையின் கை அகற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக, குழந்தையின் தாய் அஜிஷா அளித்த புகார் குறித்து விசாரணை நடத்த ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் 3 மருத்துவர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டு அதன் விசாரணை அறிக்கை தமிழக அரசிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்நிலையில், மருத்துவ அறிக்கை குறித்து குழந்தையின் தாய் அஜிஷா நிருபர்களிடம் கூறியதாவது:-

மருத்துவக் குழுவின் விசாரணை அறிக்கை எங்களுக்கு கிடைத்துவிட்டது. ஆனால், இந்த மருத்துவ அறிக்கையில் எங்களுக்கு துளியும் திருப்தி கிடையாது. ஏனென்றால், நாங்கள் கூறியது வேறு. நாங்கள் எழுதிக் கொடுத்த புகார் என்பது வேறு. ஆனால், மருத்துவக் குழு அறிக்கையில் வந்துள்ளது அதற்கு எதிர்மாறாகத்தான் வந்துள்ளது. இந்த மருத்துவக் குழு அறிக்கையில் எதுவுமே சரியாக இல்லை. இதனால், இந்த அறிக்கையில் எங்களுக்கு எந்தவிதமான திருப்தியுமே இல்லை. இந்த அறிக்கையின் முதல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது போல, 3 பேர் கொண்ட விசாரணைக் குழு வைத்து எங்களை விசாரித்தனர். அது உண்மை நான் ஒப்புக்கொள்கிறேன். இது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களை விசாரிப்பதாக கூறியவர்கள், வார்டில் தங்கி இருந்தவர்களை விசாரிக்காமல் விட்டனர்.

அதேபோல, என் குழந்தையை குறிப்பிட்டு தீவிர எடைக்குறைவு என்று கூறியுள்ளனர். பிறந்தது முதல் எடை குறைந்துகொண்டே வந்திருந்தால், அதை தீவிர எடைக்குறைவு என்று கூறலாம். ஆனால், என் குழந்தை பிறந்ததில் இருந்து எடை கூடிக்கொண்டுதானே வருகிறான். எனவே அது எப்படி தீவிர எடைக்குறைவாகும். அடுத்த நடவடிக்கையாக மருத்துவமனை முதல்வரை சந்தித்து, மகனுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை மற்றும் விசாரணை அறிக்கை குறித்து விளக்கம் கேட்க உள்ளோம். யாரை நான் நம்புவது, யாரிடம் சென்று நான் முறையிடுவது என தெரியவில்லை. தனியார் மருத்துவமனையில் வைத்து சிகிச்சை அளிக்க முடிவு செய்துள்ளோம். கை பிரச்சனையை தலையில் உள்ள பிரச்னையை காரணமாக வைத்து மூட பார்க்கிறார்கள், நான் செய்வதை எல்லாம் பணத்திற்காக செய்வதாக சொல்கிறார்கள், யாரை காப்பாற்ற இது போன்று செய்கிறார்கள் என தெரியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.