தெலங்கானாவில் பலக்னுமா எக்ஸ்பிரஸ் ரயிலின் 3 பெட்டியில் பயங்கர தீ!

தெலங்கானாவில் பலக்னுமா எக்ஸ்பிரஸ் ரயிலில் இன்று திடீர் தீவிபத்து ஏற்பட்ட நிலையில் பயணிகள் அலறியடித்து ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த தீவிபத்தில் 3 பெட்டிகள் முழுவதுமாக எரிந்த நிலையில் பயணிகள் உயிரை காப்பாற்றி கொள்ள கோச்சில் இருந்து அவசரஅவசரமாக கீழே குதித்தனர்.

மேற்கு வங்க மாநிலம் ஹவுராவில் இருந்து செகந்திராபாத்துக்கு பலக்னுமா எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் இன்று காலையில் இந்த ரெயில் தெலங்கானா மாநிலம் பொம்மைபள்ளி மற்றும் பகிடிபள்ளி இடையே வந்து கொண்டிருந்தது. அப்போது ரயிலில் உள்ள எஸ்4, எஸ்5, எஸ்6 ஆகிய முன்பதிவு பெட்டிகளில் திடீரென தீப்பிடித்தன. இதனை பார்த்த பயணிகள் அலறினர். உடனடியாக ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ரயில் நிறுத்தப்பட்டது. இதையடுத்து 3 பெட்டிகளிலும் இருந்த பயணிகள் வாசல் வழியாக இறங்கினர். சில பயணிகள் எமர்ஜென்சி டோர் வழியாகவும் கீழே குதித்தனர்.

இதையடுத்து அங்கு விரைந்த ரயில்வே அதிகாரிகள், தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். இருப்பினும் 3 பெட்டிகள் தீயில் முற்றிலுமாக எரிந்ததாக கூறப்படுகிறது. மேலும் மின்கசிவு காரணமாக பலக்னுமா எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிகள் தீப்பிடித்து எரிந்ததாக சொல்லப்பபடுகிறது. முன்னதாக பயணிகள் முன்கூட்டியே ரயிலில் இருந்து கீழே இறங்கியதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தேசம் எதுவும் ஏற்படவில்லை. இதுதொடர்பாக தொடர்ந்து ரயில்வே அதிகாரிகள், போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தெலங்கானாவில் இன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.