அமைச்சா் செந்தில் பாலாஜி தொடர்பான ஆட்கொணர்வு வழக்கின் விசாரணையை ஜூலை 11 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி, இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டு தற்போது காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் செந்தில் பாலாஜி சட்ட விரோதமாக கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும் எனக் கூறி சென்னை உயா்நீதிமன்றத்தில் மனைவி மேகலா ஆட்கொணா்வு மனுவை நீதிபதிகள் நிஷா பானு, பாரத சக்கரவா்த்தி ஆகியோா் விசாரித்தனா். இந்த வழக்கில் கடந்த செவ்வாய்க்கிழமை நீதிபதிகள் இருவரும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர். நீதிபதி நிஷா பானு, அமலாக்கத் துறையினா் செந்தில் பாலாஜியை கைது செய்தது சட்டவிரோதம். எனவே, அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று தீா்ப்பளித்தாா்.
ஆனால் நீதிபதி பரதசக்கரவா்த்தி, செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறையினா் கைது செய்ததில் எந்த சட்ட விரோதமும் இல்லை. அவா் 10 நாள்களுக்கு தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெறலாம். அதற்கு மேலும் சிகிச்சை தேவைப்பட்டால் சிறையில் உள்ள அரசு மருத்துவமனையில்தான் சிகிச்சை பெற வேண்டும் எனக் கூறி ஆட்கொணா்வு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.
இதையடுத்து, தலைமை நீதிபதி, இந்த வழக்கை விசாரிக்கும் மூன்றாவது நீதிபதியாக சி.வி.காா்த்திகேயனை நியமித்து உத்தரவிட்டாா். இந்த வழக்கு நீதிபதி சி.வி.காா்த்திகேயன் முன்பு நேற்று பிற்பகல் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் இருவரும் எந்தெந்த அம்சங்களில் மாறுபட்ட கருத்தை தெரிவித்துள்ளனா் என்பது குறித்த விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டார். அதன்படி, நீதிபதிகளின் மாறுபட்ட தீர்ப்பு குறித்த அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட்டது. மேலும் இரு தரப்பு வாதங்களும் முன்வைக்கப்பட்டன.
இதையடுத்து வழக்கை ஜூலை 11 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி கார்த்திகேயன் உத்தரவிட்டார்.
