சிறுநீர் கழித்த விவகாரம்: பாஜக நிர்வாகியை விடுவிக்க பழங்குடியின தொழிலாளர் கோரிக்கை!

மத்தியப்பிரதேசத்தில் தன் மீது சிறுநீர் கழித்த பிரவேஷ் சுக்லாவை விடுவிக்க பழங்குடி இளைஞர் அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார். பிரவேஷ் சுக்லா தன் தவறை உணர்ந்ததால் அவரை மாநில அரசு விடுவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருக்கிறார்.

மத்தியப்பிரதேச மாநிலம், சித்ஹி மாவட்டத்தில் பழங்குடியின இளைஞர் தஷ்மத் ராவத் மீது பிரவேஷ் சுக்லா என்பவர் சிறுநீர் கழித்து அவமரியாதை செய்தது குறித்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பிரவேஷ் சுக்லாவை போலீசார் புதனன்று கைது செய்தனர். அவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட தஷ்மத் காலை கழுவி முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் அவரை கவுரவித்தார். மேலும் தஷ்மத் ராவத்துக்கு ரூ.5. லட்சம் நிதியுதவி வழங்குவதற்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளதாக அம்மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார். மேலும் தஷ்மத் வீடு கட்டுவதற்கு ரூ.1.5லட்சம் நிதியுதவி அளிக்கவும் அதிகாரிகளை முதல்வர் அறிவுறுத்தி உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் சிறையில் உள்ள பாஜக நிர்வாகி தனது தவறை ஒப்புக் கொண்டு மன்னிப்பு கேட்டுள்ளார். இதையடுத்து பழங்குடியின இளைஞர் தன் மீது சிறுநீர் கழித்த சுக்லா தவறை உணர்ந்ததால் அவரை விடுதலை செய்யுமாறு அரசிடம் கோரிக்கை வைத்துள்ளார்.