காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று காலையில் திடீரென காரை நிறுத்தக்கூறி பேண்ட்டை முழங்கால் வரை மடக்கிவிட்டு வயலில் இறங்கி நாற்று நடவு செய்து, டிராக்டர் ஓட்டி விவசாயிபோல் மாறினார். இதுதொடர்பான போட்டோக்கள் தற்போது இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி. இவர் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறார். தற்போது எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். முன்னதாக அவர் பாரத் ஜோடோ யாத்திரையில் கன்னியாகுமரியில் இருந்து ஜம்மு காஷ்மீரில் வரை நடைப்பயணம் செய்துள்ளார். இந்த வேளையில் அவர் பல்வேறு தரப்பு மக்களை சந்தித்து அவர்களிடம் கலந்துரையாடினார். மேலும் ஒவ்வொரு மக்களின் குறைகளை அவர் கேட்டறிந்தார். தற்போது பாரத் ஜோடோ யாத்திரை நிறைவடைந்த பிறகும் கூட ராகுல் காந்தி தொடர்ந்து பிற மாநிலங்களுக்கு சுற்றுப்பயணம் செய்து மக்களுடன் கலந்துரையாடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
இந்நிலையில் தான் ராகுல் காந்தி டெல்லியில் இருந்து இமாச்சல் பிரதேசம் மாநிலம் சிம்லாவுக்கு காரில் சென்று கொண்டிருந்தார். இன்று காலையில் அவர் ஹரியானா மாநிலம் சோனிபேட் அருகே காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையோரம் விவசாயத்துக்காக நிலத்தை தயார் செய்யும் பணியும், வயலில் நாற்று நடும் பணியும், விதை விதைக்கும் பணியும் தீவிரமாக நடந்து வந்தது. இதில் ஆண், பெண் விவசாய தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். இதை பார்த்த ராகுல் காந்தி உடனடியாக காரை நிறுத்த கூறினார். கார் நிறுத்தப்பட்டது. இதையடுத்து ராகுல் காந்தி காரில் இருந்து கீழே இறங்கினார். அதன்பிறகு ராகுல் காந்தி தனது பேண்ட்டை முழங்கால் வரை மடக்கி வைத்து கொண்டு வயலில் இறங்கினார். இதை பார்த்த விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்கள் ஆச்சரியமடைந்தனர். ராகுல் காந்தியிடம் சென்று அவர்கள் பேசினர். இதையடுத்து விவசாயம் குறித்து விவசாயிகளிடம் ராகுல் காந்தி கேட்டறிந்தார். பிறகு வயலில் இறங்கிய ராகுல் காந்தி நாற்று நடவு செய்தார். அதன்பிறகு விவசாயிகளுடன் அவர் கலந்துரையாடிானார். மேலும் அவர் டிராக்டர் ஓட்டி நிலத்தை தயார் செய்யும் பணியையும் மேற்கொண்டார். இதுதொடர்பான போட்டோக்கள் தற்போது இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.